`கால்வைத்தால் பதவி காலி'- சாெந்த ஊர் கோயிலைப் புறக்கணித்த முதல்வர் பழனிசாமி

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 24 வருடங்களுக்குப் பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதாக இருந்தது. அதையடுத்து, கட்சிக்காரர்கள் ப்ளெக்ஸ் போர்டுகள், கட்சிக் கொடிகள் கட்டியிருந்தார்கள். ஆனால், திடீரென கடைசி நேரத்தில் வரவில்லை. இதற்கான காரணங்கள் கட்சிக்காரர்கள் மத்தியில் தற்போது கசிந்து வருகிறது.

இதுபற்றி சேலம் அ.தி.மு.க. அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும்போது தாரமங்கலத்துக்கு வந்துட்டுப் போனால், பதவி பறிபோவதோடு அசம்பாவித சம்பவங்களும் நடக்கும். எம்.ஜி.ஆர்., ராஜீவ்காந்தி போன்றோர் பதவிகளில் இருக்கும்போது தாரமங்கலம் வந்துட்டுபோன சில காலங்களிலேயே இயற்கை எய்திவிட்டார்கள்.  24 ஆண்டுகளுக்கு முன்பு தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்த அப்போதையை அறநிலையத்துறை அமைச்சர் செளந்திரராஜன் கும்பாபிஷேகத்தை முடித்துவிட்டு சென்ற இரண்டாவது நாளிலேயே அவருடைய பதவி பறிபோய்விட்டது.

இப்படி தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் பதவிகளில் இருக்கும்போது இங்கு வந்து சென்றால் அசம்பாவித சம்பவம் நிகழ்வதோடு, பதவி பறிபோகும் சம்பவங்களும் காலதாமதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்குச் சென்றது. இதையடுத்தே இங்கு வருவதாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் ரூட்டை மாற்றிக்கொண்டார். ஆனாலும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ராஜா, சின்னதம்பி போன்றோர் கலந்துகொண்டார்கள். தற்போது இந்தத் தகவல் தெரியவர அவர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்'' என்றார்கள்.

இதுபற்றி சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ``அண்ணன் எடப்பாடி பழனிசாமி வருவதாக சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு அலுவலப் பணி நிமித்தமாக வரமுடியவில்லை. சேலம் வரும்போது தாரமங்கலம் சென்று சாமி தரிசனம் செய்வார். மற்றபடி எந்தக் காரணமும் இல்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!