நம்மாழ்வார் சொன்ன வழி! - வறண்ட பூமியில் அதிசயிக்க வைத்த கரூர் விவசாயி | Drought in the sky is the farmer who cultivated the apple tree on earth!

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (23/04/2018)

கடைசி தொடர்பு:16:25 (23/04/2018)

நம்மாழ்வார் சொன்ன வழி! - வறண்ட பூமியில் அதிசயிக்க வைத்த கரூர் விவசாயி

காய்த்து தொங்கும் காஷ்மீர், சிம்லா

ஆப்பிள் மரம் குளிர் பிரதேசங்களில்தான் வளரும் என்பார்கள். ஆனால், தமிழகத்திலேயே கடும் வறட்சி நிலவும் மாவட்டங்களில் ஒன்றான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி தனது தோட்டத்தில் ஆப்பிள் மரத்தை வளர்த்து அதிசயிக்க வைத்திருக்கிறார்.

கரூரைச் சேர்ந்தவர் மனோகரன். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரான இவருக்கு, க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வேட்டையார்பாளையத்தில் 26 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ஆறு ஏக்கரில் மா, பலா, வாழை, தென்னை, கொய்யா, முருங்கை, நெல்லி, கத்திரி, பப்பாளி, சம்பங்கி பூ சாகுபடி என்று பல பயிர்களைப் போட்டுள்ளார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பாதிப்பில், அனைத்துப் பயிர்களையும் இயற்கை முறையில் செய்து வருகிறார். ஏற்கெனவே கரூர் மாவட்டம் மானம் பார்த்த பூமி. சுண்ணாம்பு மண் நிறைந்த பகுதி என்பதால், வெக்கை கடுமையாக இருக்கும். அதுவும், தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் பகுதியாக இவரது தோட்டம் உள்ள ஊரான க.பரமத்திப் பகுதியும் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில், இவரது தோட்டத்தைச் சுற்றி எங்கும் கடும் வறட்சி நிலவி, பாலைவனமாகக் காட்சியளிக்க, இவரது தோட்டம் மட்டும் பசுமை போர்த்தி காணப்படுகிறது. கிடைக்கும் சொற்ப கிணற்று நீரை சரியாக நீர் மேலாண்மை செய்து பயன்படுத்துவதால்தான், இவரது தோட்டம் பசுமையாக உள்ளது. அதுவல்ல ஆச்சர்யம்... முழுக்க முழுக்க காஷ்மீர், சிம்லா போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் வளரக்கூடிய ஆப்பிள் மரக்கன்று ஒன்றை மனோகரன் தனது தோட்டத்தில் நட்டு, அதை மரமாக்கி அதிசயிக்க வைத்திருக்கிறார்.

கரூர் விவசாயி மனோகரன்

``கரூரில் நிலவும் வெப்பத்துக்கு இங்கு வளரக்கூடிய மரங்களே கருகிப்போகின்றன. ஆனால், நான் என் தோட்டத்தில் நீர் மேலாண்மையைச் சரியாகச் செய்வதால்,எல்லா மரங்களும் செழித்து வளர்ந்துள்ளன. மா மரங்கள் அடர்ந்த இடத்தில் ஓர் ஆப்பிள் கன்றை ஊன்றி, முறையாக அதற்குத் தண்ணீர், இயற்கை உரங்கள் போட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல வளரலை. நான் அதற்குக் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதனால், அந்த மரம் நல்லா வளர்ந்துட்டு. இன்னும் ஆப்பிள் காய்க்க ஆரம்பிக்கலை. இந்த இடத்தில், நான் ஆப்பிள் மரத்தை வளர்த்துக் காட்டியதைக் கேள்விப்பட்டு ஆச்சர்யமான கரூர் மாவட்ட ஆர்.டி.ஓ சூர்யபிரகாஷ் வந்து பார்த்துட்டுப் போனார். வாரத்துக்கு ஒரு கல்லூரியிலிருந்து மாணவர்கள் வந்து பார்த்துட்டுப் போறாங்க. நம்மாழ்வார் சொன்ன வழியைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால், எந்த மரத்தையும் எந்த சீதோஷ்ணத்துலயும் வளர்த்துவிடலாம்" என்றார் முத்தாய்ப்பாக!.