`மெர்க்குரி' டீமை அழைத்து மனதாரப் பாராட்டினார் ரஜினி! - நெகிழும் கார்த்திக் சுப்புராஜ்

'மெர்க்குரி' படத்துக்குக் கிடைத்த பாராட்டுகள், அடுத்த படத்துக்காக அப்ரிஷியேஷன் என நெகிழ்கிறார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

மெர்க்குரி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் உருவான 'மெர்க்குரி' திரைப்படம் வெளியாகி அவருக்கு பாராட்டைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே, 'மெர்க்குரி' படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி, கடந்த 22-ம் தேதி, 'மெர்க்குரி' படக் குழுவினரைத் தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து மனம்திறந்து பாராட்டினார். 

ரஜினியைச் சந்தித்ததுகுறித்து கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டோம். ''தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் தீவிரமாக இருந்த சமயம், ஏப்ரல் 13-ம் தேதி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், 'மெர்க்குரி' படம் ரிலீஸானது.  தமிழ்ப் பட டைரக்டராக இருந்துகொண்டு, `மெர்க்குரி’ படம் தமிழ்நாட்டில் மட்டும்  வெளியாகாமல் இருந்தது மனசுக்கு வருத்தமாக இருந்தது. வேறு மாநிலத்தில் படத்தைப் பார்த்தவர்கள்  பலர்,  'ஏம்ப்பா தமிழ்நாட்ல மெர்க்குரி ரிலீஸாகல...' என்று அக்கறையோடும் ஆதங்கத்தோடும் விசாரித்தது மனசுக்குள் கனத்தது. இப்போது, தமிழ்நாட்டிலும்  'மெர்க்குரி' ரிலீஸாகி பிரமாதமாகப் பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.  

 'மெர்க்குரி' படத்தைப் பார்த்த ரஜினி சாருக்கு, அந்தப் படம் ரொம்பவும் பிடித்துவிட்டது. என்னை அழைத்து சந்தோஷமாகப் பாராட்டினார். அப்போதே, ''உங்களோட 'மெர்க்குரி' படத்துல வேலைபார்த்த டீமை நான் பார்க்கணும்'' என்று சொல்லியிருந்தார். கடந்த 22-ம் தேதி, 'மெர்க்குரி' குழுவை அழைத்துக்கொண்டு போயஸ் கார்டன் போனேன். என்னோடு வேலைபார்த்த ஒவ்வொருரையும் தனித்தனியாக அழைத்து கரிசனமாக விசாரித்தார், மகிழ்ச்சிபொங்க மனம்விட்டுப் பாராட்டினார். ஒளிப்பதிவாளர் திருவைப் பார்த்ததும், கட்டிப்பிடித்து 'ஃபென்டாஸ்டிக் ஜாப்' என்று வாயார வாழ்த்தினார். அடுத்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் பேசும்போது, 'ஆடியன்ஸை அப்படியே மியூஸிக்லயே கட்டிப்போட்டுட்டீங்க, எக்ஸலன்ட்' என்று மனதாரப் பாராட்டினார். பிரபுதேவா சார் சென்னையில் இல்லாததால், அவர் வரவில்லை.  ரஜினி சாரின் படத்துக்கான ஸ்கிரிப்ட் பரபரப்பாகத் தயாராகிவருகிறது, அதற்காக என்னை அப்ரிஷியேட் பண்ணி வாழ்த்தினார்'' என்று மகிழ்ச்சியாக விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!