"அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படுகின்றன!" - ஸ்டாலின் விளாசல்

"தமிழக அரசின் மோசமான செயல்பாட்டால், ஒரு குடம் தண்ணீர் 5 ருபாய் பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்" என்று புதுக்கோட்டையில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார்.

புதுக்கோட்டையில் பேசிய ஸ்டாலின்

புதுக்கோட்டை திலகர் திடலில், மறைந்த  தி.மு.க தீர்மானக் குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட  ஊராட்சித் தலைவருமான முத்துச்சாமியின் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, முத்துச்சாமியின் படத்தைத் திறந்துவைத்தார், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர், "முத்துச்சாமி காடுவெட்டியாரிடம் சீடனாக இருந்து பல கட்டங்களில் நடந்த இடர்பாடுகளைச் சந்தித்து, பெரியார், அண்ணாவிடம் அரசியல் கற்று, கழகத்திற்காக அரும்பாடுபட்டவர். நான் உள்ளாட்சித் துறையில் அமைச்சராக இருந்தபோது, முத்துச்சாமி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். அப்போது என்னைச் சந்தித்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களைப் பெற்றுக்கொண்டவர். யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால்கூட, ஒரு மருத்துவரைப் போல செயல்பட்டு, சிகிச்சையும் உதவிகளையும் வழங்கியவர் முத்துச்சாமி. இன்றைக்கு, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த உண்மையான டாக்டர் ஒருவர் அமைச்சராகவும் இருக்கிறார். அவரது பணி என்னவென்றால், தமிழ்நாட்டைக் கொள்ளை அடிப்பது. குட்காவில் மாமுல் வாங்குவது. வருமான வரித்துறையினரிடம் சிக்கி இருப்பது, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே இருப்பது என்று அந்த அமைச்சர் இருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அவர் சிறைக்குச் செல்வது உறுதி. முத்துச்சாமி போன்றவர்களின் உண்மையான உழைப்பால்தான் தி.மு.க இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது" என்றார்.

பின்னர், புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, குடிநீர் பிரச்னையைப் போக்கச் செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க ஆட்சி கிடப்பில் போட்டுள்ளது. இதனால்தான், பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை             5 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், இந்தத் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சி கிடப்பில் போட்டதுதான், இன்றைய குடிநீர் பிரச்னைக்கு காரணம். மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்க வேண்டியவர், மக்களைச் சாகடிக்கும் அமைச்சராகச்  செயல்பட்டுவருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டுள்ளேன். இந்தக் குறைகளை, அரசிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ எடுத்துக் கூறி களைய முற்படுவேன்.

அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று செயல்படுவது உண்மைதான். நீட் பிரச்னையாக இருந்தாலும் சரி, காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னையாக இருந்தாலும் சரி ,மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பா.ஜ.க., அ.தி.மு.க அரசுகள் இரட்டைக் குழல்துப்பாக்கி போன்று செயல்பட்டுவருகிறது. அ.தி.மு.க அடிக்கும் கொள்ளைகளுக்கு பா.ஜ.க அரசு துணை நிற்கிறது. வருமான வரித்துறை ரெய்டு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தோல்வி அடைவோம் என்பதற்காக, தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க அரசு உள்ளது. இதனால், உள்ளாட்சிகளுக்கு வரும் நிதிகள் திரும்பிவிடுகின்றன"’ என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!