''நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தமிழிசை..!'' ம.தி.மு.க ஆவேசம்

''நேற்று பெய்த மழையில் முளைத்த காளானான தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், வைகோ வன்முறையாளர்... ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் வாங்க வேண்டியதை வாங்கியவர், அவரது பயணத்தைத் தடைசெய்ய வேண்டும் என வசைபாடுவதும், அவதூறு செய்வதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது'' என்று ம.தி.மு.க எச்சரித்துள்ளது.

கணேசமூர்த்தி


இதுதொடர்பாக, ம.தி.மு.க பொருளாளர் அ.கணேசமூர்த்தி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து 22 ஆண்டுகளாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் போராடிவருவதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாடே அறியும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் பற்றிய செய்தி வெளியானவுடனேயே, அதை எதிர்த்து அறிக்கை தந்தது மட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டக் களத்துக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் நாசகார ஆலையை இழுத்து மூடுவதற்கு மக்கள் மன்றத்தில் எத்தகைய எழுச்சி ஏற்பட வேண்டும் என்று வைகோ விரும்பினாரோ, அந்த வகையில் மக்கள் வீறுகொண்டு எழுந்ததற்கு வரவேற்பு அறிக்கையும் கொடுத்தார். 

கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிவரும் வைகோ-வைச் சந்தித்துப் பேச ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு உலகக் கோடீஸ்வரன், ஸ்டெர்லைட் நிறுவனம் நடத்தும் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் பலமுறை வெவ்வேறு வழிகளில் முயன்றபோதும், 'முடியவே முடியாது' என்று திட்டவட்டமாக மறுத்தவர், வைகோ. கொண்ட கொள்கையில் இம்மியளவும் மாறாமல், ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாமல், எவராலும் நெருங்க முடியாத நேர்மையான தலைவராக பொதுவாழ்வில் பொன்விழா கண்ட தலைவர் வைகோ-வை, நேற்று பெய்த மழையில் முளைத்த காளானான தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், வைகோ வன்முறையாளர், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் வாங்கவேண்டியதை வாங்கியவர், அவரது பயணத்தைத் தடை செய்ய வேண்டும் என்று வசைபாடுவதும், அவதூறு செய்வதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழர் நலன், தமிழகத்தின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் 9 பிரதமர்களை எதிர்த்து, தனிமனிதராகப் போராடிய வரலாறு வைகோவுக்கு மட்டுமே உண்டு. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாத நெஞ்சுறுதிகொண்ட வைகோவை மிரட்டுவதற்கான துணிச்சல், இந்த உலகத்தில் எவருக்கும் இல்லை என்பதை தமிழிசை புரிந்துகொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற பரப்புரை மேற்கொண்ட வைகோவுக்கு கறுப்புக்கொடி காட்டுவதற்கு பா.ஜ.க-வினர் முயன்றபோது, அதைத் துணிச்சலாக எதிர்கொண்ட தலைவர் வைகோ. ஆனால், பா.ஜ.க-வினர் கறுப்புக்கொடி என்ற பெயரில் திட்டமிட்டு வைகோ மீது கற்களை எறிந்து, வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதேபோன்றுதான், முதல் நாள் பயணத்தில் குளத்தூரில் பாட்டிலை வீசித் தாக்க முற்பட்டனர். பா.ஜ.க-வினரின் இதுபோன்ற வன்முறைச் செயல்களைத் தடுக்காமல் வேடிக்கைபார்க்கும் காவல்துறையினரின் அலட்சியப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் களத்தில் நின்று போராடும் தலைவர் வைகோ பாதுகாப்புக்கு சிறு ஆபத்து என்றால், தமிழர்கள் வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். வைகோ-வின் தமிழக வாழ்வாதாரப் பயணத்தில் மேலும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது, தமிழக அரசின் கடமை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!