மூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை!

நிர்மலா தேவி


நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவர் கூறிய முக்கிய பிரமுகர்கள்குறித்த விவரங்களை மூன்று நிமிட வீடியோவாக எடுத்த விசாரணை அதிகாரிகள், சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர்.

நிர்மலா தேவியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரித்துவருகின்றனர். ஒவ்வொரு கேள்விக்கும் சமயோசிதமாக பதிலளிக்கும் நிர்மலா தேவியை, வழக்கில் சிக்கவைத்த வில்லங்க கேள்வியும் கேட்கப்பட்டது. அப்போது சில நிமிட அமைதிக்குப் பிறகு, முக்கிய தலைவர்களின் பெயர்களை அவர் கூறியிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்த போலீஸார், சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கின்றனர். 
 இந்த வீடியோகுறித்து விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி தலைமை இதுவரை விசாரணை அதிகாரிகளுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. இதனால், வீடியோவில் உள்ள வி.வி.ஐ.பி-களைக் காப்பாற்றும் முயற்சியும் மறைமுகமாக நடந்துவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

 இந்த வீடியோ தகவல் கிடைத்ததும், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் விசாரித்தோம். 

 "போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நிர்மலா தேவியிடம் இந்த வழக்குத் தேவையானது குறித்து விசாரித்துவருகிறோம். எங்களது விசாரணைக்கு நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறார். சில கேள்விகளைத் தவிர பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதிலளித்துவருகிறார். நிர்மலா தேவியின் வாக்குமூலம் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு சிலரிடம் விசாரணை நடந்துவருகிறது. அதில் சிலர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களிடம் விசாரித்தால், இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும். 

 நிர்மலா தேவியின் குடும்பப் பின்னணிகுறித்து அவரது கணவர் சரவண பாண்டியன் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துள்ளோம். அதன் அடிப்படையில், இன்று நிர்மலா தேவியிடம் சில கேள்விகளைக் கேட்டோம். குடும்பம் தொடர்பான எங்களது கேள்விக்கு அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதோடு, இந்த வழக்கு தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்று கூறினார். இதனால், அதுபோன்ற கேள்விகளைக் கேட்பதில்லை. 

இதற்கிடையில், நிர்மலா தேவி பயன்படுத்திய செல்போன் நம்பர்களின் கால் ஹிஸ்டரியை சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளோம். அதில், அவர் நீண்ட நேரமாகப் பேசியவர்கள் யார் யார் என்ற தகவலை சேகரித்துள்ளோம். அவர்களிடம் விசாரிக்க, தனியாக மூன்று டீம் போலீஸார் களமிறங்கியுள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சியின் ஒப்பந்தக்காரர்கள் தொடங்கி, உயர் கல்வித்துறை உயரதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள், ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அமைச்சர்கள், பா.ஜ.க-வினர் எனப் பட்டியல் நீள்கிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், நிர்மலா தேவியுடன் நட்பிலிருந்தவர்கள் யாரென்று விவரங்கள் எங்களிடம் உள்ளது. 
 இந்த நிலையில், நிர்மலா தேவியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு விசாரணை நேரத்தைக் குறைத்துள்ளோம். பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்காக நடந்த பேரத்திலும்  நிர்மலா தேவியின் பெயர் அடிபட்டது.  அதுதொடர்பாக நிர்மலா தேவியிடம் விசாரித்தோம். அப்போது அவர் தெரிவித்த தகவல்களை மட்டும் மூன்று நிமிட  வீடியோவாக எடுத்து, எங்களின் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளோம். உடனடியாக அதை வாட்ஸ்அப்பில் வீடியோவாக அனுப்பும்படி உயரதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அந்த வீடியோ சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் உள்ள  உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். 


 அந்த வீடியோவில், நிர்மலா தேவி சொல்லும் தகவல்கள் அனைத்தும்  வெளியானால், ஆளுங்கட்சி தொடங்கி தேசிய கட்சி வரை புயல் அடிக்கும். பல கட்சிப் பிரமுகர்கள் தொடங்கி ஆளுங்கட்சியினர் வரை நடத்திய எட்டு கோடி ரூபாய் பேரம்குறித்து அந்த வீடியோவில் தகவல் இருக்கிறது. அந்த வீடியோகுறித்து விசாரணை நடத்த உயரதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். மேலும், வீடியோவில் ஆளுங்கட்சிப்  பிரமுகர்கள், அமைச்சர்ககள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள், உயர்கல்வித் துறையில் உள்ள சிலர் எனப் பலரது பெயர்கள் இதில் அடக்கம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!