`எங்கள் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறார் திவாகரன்!’ - கொந்தளித்த வெற்றிவேல் 

திவாகரன் மற்றும் ஜெய் ஆனந்தை விமர்சித்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருப்பது அ.ம.மு.க-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெற்றிவேல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாகப் பிரிந்தது. பல்வேறு குழப்பங்களுக்குப் பின்பு சசிகலா, தினகரன் தலைமையில் ஓர் அணியும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும் உருவானது. மேலும், அ.தி.மு.க-வினர் சிலர் தீபா பேரவையில் இணைந்தனர். தற்போது சசிகலா தரப்பினருக்கு இடையே பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சசிகலாவின் சகோதர் திவாகரன் மற்றும் அவரின் மகன் ஜெயானந்த்துக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. தினகரன் கட்சி அறிவிப்புக்குப் பின்னர், இந்தப் பனிப்போர் முற்றி வருகிறது. ஜெயானந்த் தன் ஃபேஸ்புக் பதிவுகளில் தினகரன் கட்சியைத் தாக்கி எழுதி வருகிறார். இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ வெற்றிவேல், திவாகரன் மற்றும் ஜெயானந்த்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், `அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் ஆணிவேராகச் சின்னம்மாவும் கழகத்தின் முகமாகத் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மன்னிக்க முடியாதத் துரோகத்தாலும் மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சின்னம்மா அவர்கள் சிறைக்குச் சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கு மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் டி.டி.வி.தினகரன் செயலாற்றிவருகிறார்.

அவருக்கு பக்கத்துணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, தியாகத் தாயின் பின்னால், நான் உட்பட 18 + 3 சட்டமன்ற உறுப்பினர்களும் எண்ணிலடங்கா கழகத் தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம்.

ஆனால், எங்கள் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வைக் காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தைச் சார்ந்த திவாகரனும் ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.

சின்னம்மாவின்மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண் பழிகளையும் தங்கள் குடும்பத்தின்மீது சுமத்தப்பட்ட பழிச் சொற்களையும் அண்ணன் தினகரன் கழகத்தைத் தலைமையேற்று நடத்திய இந்தக் காலகட்டத்தில்தான் முறியடிக்க முடிந்தது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு மறைந்த மகாதேவனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்குத் தெரியும்.

மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக் கூடாது என்கிற காரணத்தால்தான், சின்னம்மா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்குச் சென்றார். ஆனால், ஏதோ தங்கள் பின்னால்தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப்போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையிலிருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது உண்மைக்குப் புறம்பானது. இதை, முதலில் சின்னம்மா ஏற்றுக்கொள்வாரா? தங்களின் சுயலாபத்துக்காகக் கழகத்தையும் எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதீர்கள்... நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களைக் குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்

எடப்பாடி அணி நிர்வாகியான சத்திரப்பட்டி சிவகிரி என்பவர், 18 சட்டமன்ற உறுப்பினர்களும் திவாகரன் பின்னால்தான் இருக்கிறார்கள் என்பதைப் போன்ற ஒரு பொய் பரப்புரையைச் செய்கிறார். இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன. எங்கள் தலைமை சின்னம்மாவும் அண்ணன் டி.டி.வி.தினகரனும்தான். இவர்கள் இருவரைத் தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும் குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது, எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது.

எதுவரினும், எவர் எதிர்ப்பினும் எங்கள் பயணம் என்றும் சின்னம்மாவுடனும் அண்ணன் டி.டி.வி.தினகரனுடனும்தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம், காலத்துக்கும் இருப்போம்...” என்று காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!