`தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க தென்கொரிய நிபுணர்கள் உதவி!’ - கருணாஸ் எம்.எல்.ஏ புதிய திட்டம்

 திருவாடானை தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொரிய நாட்டு நிபுணர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாக நடிகரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தார். 

திருவாடானைத் தொகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, கொரிய நாட்டு நிபுணர்கள்மூலம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாக, நடிகரும்,  சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தார். 

திருவாடானை தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விளக்கும் கருணாஸ்

திருவாடனைத் தொகுதிக்குட்பட்ட வடவயல், தளிர் மருங்கூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர் தேவைக்காக இரவு, பகல் பாராமல் கண் விழித்திருந்து தண்ணீர் சேகரித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கிணறுகளில் பெரும்பாலானவை வற்றிபோன நிலையில், அவ்வப்போது ஊறும் கொஞ்ச நஞ்ச குடிநீருக்காகவும், காவிரி நீர்க் குழாய்களில் தண்ணீர் திறந்துவிடும் நேரங்களில், அதிலிருந்து வெளியேறும் நீரை சேகரிக்கவும், ஆண் பெண் என்ற பேதமின்றி காத்திருந்து தண்ணீரை சேகரித்துவருகின்றனர். கிராமங்களில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாடுகுறித்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என எல்லோரிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், தளிர் மருங்கூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த திருவாடானைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸிடமும் குடிநீருக்காக தாங்கள் படும் அவதிகுறித்து முறையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ''ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே தண்ணீர்த் தட்டுப்பாடு நிறைந்த மாவட்டம் என்பதுதான் நினைவுக்கு வரும். கோடைக்காலங்களில், அது இன்னும் கூடுதலாகும். எனது தொகுதியில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, மக்களுடன் சேர்ந்து நானும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவருகிறேன். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. என்னைப் பொறுத்தமட்டில், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிவருகிறேன். 

தற்போது நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, தென்கொரியாவைச் சேர்ந்த நீரியல் வல்லுநர்கள்மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தென் கொரியாவைச் சேர்ந்த மூன் ஹோ லீ மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அஜய் சர்மா ஆகியோர், இதற்கான திட்டத்தை விளக்கியுள்ளனர். இதன்படி, அதிநவீன ஸ்கேனர் கருவிமூலம் திருவாடனைப் பகுதியில் நல்ல தண்ணீர் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதியில் சுமார் 2 முதல் 3 கி.மீ ஆழத்திற்கு ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் இதிலிருந்து பெற முடியும். மேலும், இத்திட்டம் 10 ஆண்டுகள் வரை கேரண்டி உடையது என்றாலும், 100 ஆண்டுகள் வரை எவ்வித இடையூறுகளும் ஏற்படாத திட்டம் இது. தற்போது, புனே பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் தெரிவித்துவிட்டு, தற்போது மாவட்ட ஆட்சியரிடமும் விளக்கியுள்ளேன். முதல்வர், இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் நிலையில், திருவாடனைத் தொகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முடியும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!