திருடன் என நினைத்து கிராம மக்களால் அடித்துக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவன்! | College student beaten to death by villagers

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (23/04/2018)

கடைசி தொடர்பு:15:48 (24/04/2018)

திருடன் என நினைத்து கிராம மக்களால் அடித்துக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவன்!

திருடன் என நினைத்து, கல்லூரி மாணவனை கிராம பொதுமக்கள் அடுத்துக் கொலைசெய்துள்ளனர். 

கல்லூரி மாணவர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சதாசிவம், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், டூவீலரில் அவருடைய வீட்டுக்கு, சுமங்கலி பகுதி வழியாகச் சென்றுள்ளார். சுமங்கலிப் பகுதியில், இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊருக்குள் வருவதாகவும், திருட்டு சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், சுமங்கலி கிராம மக்கள் அச்சத்துடன் இரவில் தூங்காமல் இருந்துள்ளனர். போலீஸும் சுமங்கலிப் பகுதி வழியாகச் செல்லும் வாகனங்களைச் சோதனைசெய்துள்ளது. 

இந்த நிலையில், சதாசிவம் தனது நண்பர்கள்களுடன் டூவீலரில் ட்ரிபிள்ஸ் செல்ல, அவர்களை மடக்கியுள்ளது போலீஸ். 'நாம் போலீஸிடம் மாட்டிக்கொண்டால் கேஸ் போடுவார்கள் என்று நினைத்து, வண்டியை நிறுத்தாமல் அவர்கள் சுமங்கலி கிராமத்துக்குள் சென்றுள்ளனர். கிராமத்தை விட்டு வெளியே செல்ல வழி தெரியாததால், கிராமத்துக்கு உள்ளேயே சுற்றிச்சுற்றி வந்துள்ளனர். இதைக் கண்ட சுமங்கலி கிராம மக்கள், இளைஞர்களை மடக்கியுள்ளனர். ஆனால், அங்கும் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சிலர், மூவரும் திருடர்கள் என நினைத்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கல்லால் பலமாகத் தாக்கியுள்ளனர். இதில், சதாசிவத்துக்கு மார்புப் பகுதியில் பலமாக அடி விழுந்துள்ளது. உடனே சதாசிவம் மயங்கிவிட்டார். பிறகு, அவருடைய நண்பர்கள் சதாசிவத்தை அழைத்துக்கொண்டு பெருங்காட்டூர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு சோதனைசெய்த டாக்டர்கள், சதாசிவம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து, மோரணம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர் . சதாசிவத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து வந்த சதாசிவத்தின் உறவினர்கள், கல்லால் தாக்கியவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என செய்யாறு ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்பு, மோரணம் போலீஸார் இந்தச் சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவுசெய்து, சுமங்கலி கிராமத்தைச் சேந்த சிலரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதாசிவம், தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க