`ஆளுநர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்!’ - தமிழ்ப் பல்கலை. மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழக ஆளுநர் புரோஹித் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் எனத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணாக்கர் மற்றும் ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

பட்டமளிப்பு விழா ஒன்றில் ஆளுநர்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் பெயர் அடிபடுவதால், அருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமிருப்பதாகத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணாக்கர் மற்றும் ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவக்குமார், ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக கவர்னர்தான் வேந்தராக உள்ளார். பன்வாரிலால் புரோஹித், தமிழக கவர்னராகப் பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழங்களுமே வரலாறு காணாத அளவுக்கு சீரழிந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பணியில் சேர, ஆண்களாக இருந்தால் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மாணவர்கள் லஞ்சம் கொடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும். குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று, அவர்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக அவரைக் கைது செய்து, உரிய விசாரணை செய்ய வேண்டும். கவர்னர் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா எனப் பலரும் கேட்கிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இதற்கு வழியுள்ளது. மேகாலாய கவர்னர் சண்முகநாதன்மீது பாலியல் குற்றாச்சாட்டுகள் எழுந்தபோது, அவர்மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதோடு, பல பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகளிலும் இவருக்கு முதன்மை பங்குள்ளது. இவர் மீது உடனடியாகக் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும” என்றார்.     

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!