`பேரன்பு ஓவியங்களில் புறக்கணிப்பின் வலி!' - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சூஷ் ஓவியங்கள்

சூஷ்

 ''என் அப்பாவிடம் பேரன்பையும், ஆழமான புரிந்துணர்வையும் எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அவருக்கு அன்பென்று ஒன்று இருந்திருக்கலாம். ஆனால், அப்படியொன்று இருந்ததாக அவர் என்னிடம் காட்டிக்கொண்டதில்லை. மற்ற பெண்கள், தங்கள் அப்பாக்களிடம் எப்படிக் கொஞ்சுவார்கள், எவ்வளவு அன்பில் வளர்கிறார்கள் என கவனிக்கத் தொடங்கினேன். அப்பாவிடம் எனக்கு எது கிடைக்கவில்லையோ, எது மிகவும் தேவைப்பட்டதோ, அதைத்தான் வரைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்” - பார்த்தவுடன் இதயம் கரையும் சூஷ் ஓவியங்களை வரைந்த உக்ரேனிய பெண் ஓவியர் ஸ்நெஷானா சூஷின், ஹஃப்பிங்டன் போஸ்ட் நேர்காணல் ஒன்றில் இப்படிச் சொல்கிறார்.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதியப்பட்ட ஒரு வாரத்துக்குள், சூஷின் ஓவியங்களுக்கு 2 மில்லியன் விருப்பங்களும், முடிவில்லா ப்ரியங்களும் வந்து கொட்டின. கோபித்துக்கொண்ட மகள்களுக்கு இதை அனுப்பியும், அப்பாவை சமாதானப்படுத்த மகள்களும்  இந்த ஓவியங்களை அனுப்பி அன்பை வென்ற கதைகளும் இணையம் நிறைத்தன. கிங் சைஸ் கட்டிலில், முக்கால்வாசி இடத்தை தன் மகளுக்குக் கொடுத்துவிட்டு, கட்டிலின் ஓரத்தில் ஒடுங்கித் தூங்கும் குண்டு அப்பா, தனக்கும் மகளுக்கும் இடையில் துணியைக் கட்டிவிட்டு, குயில்குஞ்சு மகள் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஒளிந்துகொள்வதுபோல நடிக்கும் அப்பா, பெரிய தொப்பையின் கதகதப்பில் புதைத்துவைத்து, மகளைத் தூங்கவைக்கும் அப்பா என சூஷின் ஓவியங்கள் முழுவதும் அன்பின் வெம்மை.

சூஷ் soosh

யாருக்கானவை இந்த ஓவியங்கள் என்று Huffington post பத்திரிகையாளர் கேட்கிறார். ''எனக்கு 10 வயதில் மகன் இருக்கிறான். இந்த ஓவியங்களை என் மகன் கவனித்துக்கொண்டே இருக்கிறான். அவன் ஒரு மகளுக்கு தந்தையாகும்போது, அன்பைக் காட்டுவதில் அவனுக்குத் தடை இருக்காது இல்லையா? அதுமட்டுமில்லை. வேலைப்பளுவிலோ, பொறுப்பின்மையாலோ அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவும் குழந்தைகளைப் பொம்மைகளாக மாற்றிவிடும் பெற்றோருக்கும் சேர்த்துதான், ஓவியங்கள் வரைகிறேன். இது, கொஞ்சம் பெற்றோர்களை அன்பாக மாற்றினாலும்கூட எனக்குப் போதும். குழந்தைகளின் உலகில், பாராட்டப்படுவதும், நேசிக்கப்படுவதும்தான் முழுமையான தேவை. புரிந்துகொள்பவர்களுக்கு என் அன்பும், அணைப்பும்” என்கிறார் சூஷ். 

Soosh-இன் வாட்டர் கலர் ஓவியங்களில் குழந்தைகள் வளர்வதேயில்லை. ’அப்பாக்களையும் அம்மாக்களையும் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் வளர்ந்த குழந்தைகளின் படங்களைப் பார்க்கிறேன். தன்னளவில் அவர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்’ என்கிறார் சூஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!