வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (23/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (23/04/2018)

`போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை’ - காயமடைந்த தாயுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மகன்!

 நடவடிக்கை எடுக்காத போலீஸார் குறித்து புகார் அளிக்க காயம் அடைந்த தாயை ஆட்சியர் நடத்தும் குறை தீர் கூட்டத்திற்கு தூக்கி வந்து அதிர்ச்சி அளித்த மகன்.

நடவடிக்கை எடுக்காத போலீஸார் குறித்துப் புகார் அளிக்க, காயம் அடைந்த தாயை ராமநாதபுரம் ஆட்சியர் நடத்தும் குறை தீர் கூட்டத்துக்குத் தூக்கிவந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது. 

காயம் அடைந்த தாயினை ராமநாதபுரம் ஆட்சியரிடம் தூக்கி வரும் மகன்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமம், கீழப் பெருங்கரை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ருக்மணி (60). இவரது மகன் ஜீவா (40), வெளிநாட்டில் வேலைபார்த்துவருகிறார். இதனால், ருக்மணி மட்டும் கீழப்பெருங்கரையில் வசித்து வருகிறார். இந்நிலையில்,  ருக்மணிக்கும் அவரது தம்பி சுப்பிரமணிக்கும் சொத்துகுறித்து கடந்த 1-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ருக்மணிக்கு காயம் ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். அக்கம்பக்கம் இருந்தவர்கள், ருக்மணியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, இது குறித்து அவரது மகன் ஜீவாவுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, கீழப்பெருங்கரைக்கு வந்த ஜீவா, இதுகுறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் சுப்பிரமணி மீது புகார் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் இந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த தனது தாயார் ருக்மணியை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தானே சுமந்துவந்தார். அங்கு, குறைதீர் கூட்டம் நடத்திக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் முன் தனது தாயாரை இறக்கி வைத்துவிட்டு, தாக்குதல் சம்பவம்குறித்து நடவடிக்கை எடுக்காத போலீஸார்குறித்து முறையிட்டார். இதை விசாரித்த மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, தனது தாயாரை தூக்கிச் சென்றார் ஜீவா.