வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (23/04/2018)

கடைசி தொடர்பு:23:00 (23/04/2018)

அம்பேத்கர் பேனர் கிழிப்பால் 4 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை!

ஜெயங்கொண்டத்தில், அம்பேத்கர் பேனர் கிழிக்கப்பட்டாதால், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள், 4 மணி நேரத்துக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                           

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், அம்பேத்கரின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு, அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு அம்பேத்கர் பேனரைக் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதி வி.சி.க-வினர் மற்றும் பொதுமக்கள், பேனரை சேதப்படுத்தியர்வர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி, கங்கை கொண்ட சோழபுரம் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக மறியல் நடைபெற்ற போதிலும், போலீஸார் பேனரை சேதப்படுத்தியவர்களைக் கைதுசெய்யாததால், ஆத்திரமடைந்த வி.சி.க-வினர், கிழிக்கப்பட்ட பேனருடன்    கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                                            
சாலை மறியல் நடைபெற்ற தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார், குற்றவாளிகளைக் கைதுசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், வி.சி.க-வினர் மறியலைக் கைவிட்டனர். 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சாலை மறியலால், கும்பகோணம்- சென்னை சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடுமையான போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.