`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு இதுதான் காரணம்!’ - தஞ்சாவூரில் கலகலத்த வைகோ

'காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், பல பாதுகாப்பு தமிழகத்திற்குக் கிடைக்கும்' என தஞ்சாவூரில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் வைகோ பேசினார். 

வைகோ


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். 

அப்போது, ``கர்நாடகாவில் அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு நேரடியாக அனுமதி தராது என தெரிவித்துவிட்டு, பிறகு அணையைக் கட்டிக்கொள்ள அனுமதி கொடுத்த சதித் திட்டத்தின் விளைவுதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்குக்  கராணம். நடுவர் மன்றம் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு இணையானதுதான். இந்நிலையில், நடுவர் மன்றம் தீர்ப்பளித்த பிறகு, இதை ஏன் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இதுவே ஒரு மோசடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதியை ஆயிரம் அடி குழிதோண்டிப் புதைத்து, தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதியைச் செய்துவிட்டார். மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழகத்திற்கு  பாதுகாப்பு கிடைக்கும். கர்நாடகா புதிய அணையைக் கட்ட முடியாது. அணையின் பாதுகாப்பு, மத்திய தொழில்படைக்குச் சென்றுவிடும். தண்ணீரை ஒழுங்குபடுத்தி அனுப்புகிற வேலையை ஒழுங்காற்றுக் குழு செய்யும். இந்தப் பாதுகாப்பு எல்லாம் நமக்குக் கிடைத்து காப்பாற்றப்படுவோம். இதனால், நடுவர் மன்றத் தீர்ப்பை புறம்தள்ளிவிட்டு, புதிய திட்டமான ஸ்கீம் என்பதை அமைத்துக்கொள்ளலாம். அதை, நாடாளுமன்றத்தின் விருப்பத்தின்படி மாற்றிக்கொள்ளலாம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் எண்ணம் உச்ச நீதிமன்றத்தில் நிறைவேறுகிறது. 

கர்நாடகாவில் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும். பட்டினிப் பிரதேசமாக ஆக்க வேண்டும் என்கிற தொலைநோக்கான வஞ்சகம் உள்ளது. அப்படிச் செய்தால், நிலங்களை விவசாயி அடிமாட்டு விலைக்கு விற்பதைத் தவிற வேறு வழியில்லை. 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் இழப்பதோடு, 19 மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையும் பழாப் போயி, இவர்கள் சொல்லுகிற ஹைட்ரோகார்பன், மீத்தேன்  திட்டத்துக்கு அனுமதி கொடுக்க முடியும். அப்படிக் கொடுத்தால், வெளிநாட்டு, உள்நாட்டுக் கம்பெனிகள் விவசாயிகள் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கலாம். அதன்பிறகு, தமிழகம் எத்தியோப்பியாவாக  மாறும். இதன்மூலம் லட்சக்கணக்கான கோடிகள் இந்தியாவுக்குக் கிடைக்கும். ஆயிரம் ஆயிரம் காலமாக இருக்ககூடிய தமிழர் பண்பு, கலாசாரம் என்பதை எல்லாம் அழித்து, ஒற்றை மொழி, ஆட்சி, மதம் என்கிற ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒருபகுதிதான், மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமால் இருப்பது. இந்த அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. தமிழக அரசு உரிமைகளைக் காலடியில் போட்டுவிட்டு, தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு எழுந்ததுபோல காவிரிப் போராட்டத்துக்கும் கிளர்ந்து எழ வேண்டும். மோடி நெருப்போடு விளையாடுகிறார். மனிதச்சங்கிலிப் போராட்டம் வெற்றிபெறும். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும்’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!