கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கேரள அரசு! - வேலைநிறுத்தத்தைக் கைவிட்ட செவிலியர்கள்

கேரளாவில் செவிலியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசு நிர்ணயம் செய்ததைத் தொடர்ந்து நாளை முதல் நடைபெற இருந்த காலவரையறை வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில், செவிலியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அரசு நிர்ணயம் செய்ததைத் தொடர்ந்து, நாளை முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவிலியர்கள்

கேரளாவில், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்கள்.அனைவருக்கும் குறைந்தபட்ச மாதச் சம்பளமாக 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவந்தது. இதை வலியுறுத்தி, கேரளா முழுவதும் உள்ள செவிலியர்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இதனால், மருத்துவ சேவைகள் முழுமையாக முடங்கின. 

அதையடுத்து, மாநில அரசும் தொழிலாளர் நலத்துறையும் செவிலியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டதால், போராட்டம் முடிவுக்குவந்தது. மார்ச் 31-ம் தேதிக்குள் அவர்கள் விரும்பியபடி ஊதியம் நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், நர்ஸ்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேரள மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அதனால் அதிருப்தி அடைந்த செவிலியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். ஒருங்கிணைந்த நர்ஸ்கள்.கூட்டமைப்பு என்கிற அமைப்பின் சார்பாக, 24-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் நர்ஸ்கள் பேரணியாகப் புறப்பட்டு 8 நாள்களுக்குப் பின்னர் திருவனந்தபுரம் சென்று, சட்ட மன்றத்தின் முன்பாகப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். 

இந்தப் போராட்டத்தால், மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்பதால், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன், செவிலியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தினார். அதில் பங்கேற்ற நர்ஸ்கள், பிரதிநிதிகள், ’தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 20,000 ரூபாயை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்கிற ஒற்றை கோரிக்கையை முன்வைத்ததுடன், அதில் உறுதியாக இருந்தார்கள். 

அதைத் தொடர்ந்து, நர்ஸ்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. அவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளமாக 20,000 ரூபாய் என்பதை அரசு அறிவிக்கையாக வெளியிட்டது. நர்ஸ்களுக்கு மட்டும் அல்லாமல், மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றிய துணை நர்ஸ்களுக்கும் இந்தச் சம்பளம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், கேரள நர்ஸ்கள் கூட்டமைப்பின் சார்பாக நாளை (24-ம் தேதி) நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம், கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!