வீட்டுக்கு பாதை இல்லைனு பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க!’’ - மணக்கோலத்தில் புகார் அளித்த இளைஞர்

தன்னுடைய வீட்டுக்கு சரியான வழித்தடம் அமைக்கப்படாததால், திருமணத்துக்கு யாரும் பெண் தருவதில்லை என்று கூறி, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மணக்கோலத்துடன் மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

புகார் அளிக்க வந்த இளைஞர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சேனாபதி செட்டிபாளையம் பகுதியில் வசித்துவருபவர், அருணாசலம். இவர், இன்று வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, கழுத்தில் மாலையுடன் மணமகன் கோலத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்திறங்கினார்.

பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம்," என்னுடைய வீட்டுக்கு அரசால் முறைப்படி பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் வீட்டுக்குச் செல்வதற்கான வழித்தடம் குறிப்பிடப்படவில்லை. இந்த வழித்தட சிக்கலுக்குத் தீர்வு வேண்டி, 2 ஆண்டுகளுக்கு முன்பே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அதில், 'வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கும் என்னுடைய இடத்துக்கு, முறையான பாதை வசதியை ஓதுக்கீடு செய்து தர வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை என்னுடைய இடத்துக்கு வழித்தடம் ஏற்படுத்தித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரச்னை தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்தப் பிரச்னையால், என் வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்கவரும் பலரும் என்னை நிராகரித்துவிடுகிறார்கள். வீட்டுக்கு செல்லவே வழி இல்லாதவருக்கு, நாங்கள் எப்படிப் பெண் தருவது என்றும் கேட்கிறார்கள். எனவே, எனக்கு திருமணம் கைகூடாததற்கு வழித்தடம் ஒரு முக்கியக் காரணமாக இருப்பதை உணர்த்தும் வகையிலும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டிப்பதற்காகவும் நான் இங்கு மணமகன் கோலத்தில் வந்திருக்கிறேன்’’ என்றார்.

மாலையும் கழுத்துமாக வந்தவரை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி, மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுத்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி, மாலையைக் கழற்றி வைத்தபிறகே அருணாசலத்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தால், மாவட்ட ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!