வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (24/04/2018)

கடைசி தொடர்பு:01:00 (24/04/2018)

`விகடன் செய்தி எதிரொலி’ - மேகமலைச் சாலையில் அறிவிப்புப் பலகை

மேகமலைச் சாலையில் அறிவிப்பு பலகை.! – விகடன் செய்தி எதிரொலி.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. சுற்றுலாத் தலங்களின் ஒன்றாகத் திகழும் மேகமலையில், சாலை வசதி இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதைகருத்தில் கொண்டு, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சாலைப்பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில், மேகமலைக்கு குடும்பத்தோடு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூடவே, முடிவடையாத சாலைப் பணிகள் காரணமாக விபத்துகளும் நடக்கின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் பலியானார்.  தொடர் விபத்துக்கு ஆமை போல அசைந்து கொண்டிருக்கும் சாலைப் பணியும், வளைவுகளை முன்னரே சுட்டிக்காட்டும் சாலையோர அறிவிப்புப் பலகையும் இல்லாததே என விகடன் செய்தி வெளியிட்டது.

செய்தியின் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறையினரால் சாலையோர அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், ‘’சாலைப்பணிகள் விரைந்து முடிவடையும். தொடர்ந்து ஆபத்தான வளைவுகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும்’’ என்றார். இதை முன்னரே செய்திருந்தால், ஒரு உயிர் போயிருக்குமா? இனியாவது விழித்துக்கொள்ளட்டும் நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும்.