வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (24/04/2018)

கடைசி தொடர்பு:00:30 (24/04/2018)

எஸ்.வி சேகரை உடனே கைது செய்ய வேண்டும்! – தேனி பத்திரிகையாளர்கள் எஸ்.பியிடம் மனு

எஸ்.வி சேகரை உடனே கைது செய்ய வேண்டும்.! – தேனி பத்திரிகையாளர்கள் எஸ்.பி’யிடம் மனு.

தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகரும், பா.ஜ.க நிர்வாகியுமான எஸ்.வி சேகரை உடனே கைது செய்ய வேண்டும் என தேனி பிரஸ் யூனியனைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்த தேனி மாவட்ட பிரஸ் யூனியன் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவில்,‘’கடந்த 19ம் தேதி பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி சேகர் தனது முகநூல் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து கொச்சையாக பதிவிட்டிருந்தார். இச்செயல் கண்டிக்கத்தக்கது. இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தேசத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகைதுறையில் பணியாற்றுவோர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.வி சேகரின் கொடூர மனநிலையும், இழிவான மற்றும் அருவருக்கத்தக்க கருத்தும் பெண் இனத்தையே இழிவு படுத்தியுள்ளது. எனவே, எஸ்.வி சேகரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும், சென்னையில் எஸ்.வி சேகருக்கு எதிராக போராடிய பத்திரிகையாளர்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்தகட்டமாக, எஸ்.வி சேகரைக் கண்டித்து தேனி பிரஸ் யூனியன் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், தற்போது முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எஸ்.வி சேகரின் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் தேனி பிரஸ் யூனியன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.