‘தண்ணீருக்காக தினமும் 3 மைல் அலையுறோம்!’ - கலெக்டர் ஆபீஸில் கண்ணீர் வடித்த கிராமப் பெண்கள் | Women seiged collector office for water

வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (24/04/2018)

கடைசி தொடர்பு:07:55 (24/04/2018)

‘தண்ணீருக்காக தினமும் 3 மைல் அலையுறோம்!’ - கலெக்டர் ஆபீஸில் கண்ணீர் வடித்த கிராமப் பெண்கள்

தண்ணீர் கேட்டு கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட பெண்கள்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள காலிக்கா வலசு பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கூட்டமாக வந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். ''எங்க பகுதியில் உள்ள நெசவாளர் காலணியில் சுமார் 160 குடும்பங்கள் வசித்து வருகிறோம். குடிநீர்வசதி, அடிப்படை வசதி என எதுவும் இல்லாமல் மிகுந்த சிரமத்தோடு வாழ்க்கை நடத்திவருகிறோம்'' என கண்ணீரோடு புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து புகார் கொடுக்க வந்த பெண்கள் கூறுகையில், “பசுமை வீடு மூலமாகத்தான் எங்கள் பகுதியில் உள்ள 160 வீடுகளையும் கட்டிக் கொடுத்தாங்க. ஆனா, இதுவரைக்கும் தண்ணீர் வசதி, தெருவிளக்கு, சாக்கடை வசதி என எதுவுமே செஞ்சு கொடுக்கல. தெருவிளக்கு இல்லாததால ராத்திரி நேரத்துல வெளியவே வர முடியல. சரியான சாக்கடை வசதி இல்லாததால, சாக்கடைத் தண்ணி எல்லாம் ரோட்டுலதான் போய்க்கிட்டிருக்கு.”

தண்ணீர்

அதுமட்டுமில்லாம, கடந்த ஒரு வருஷத்துக்கு மேல தண்ணீருக்காக ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். 8 நாளைக்கு ஒரு தடவை தான் தண்ணி விடுறாங்க. அதுவுமே அரை மணி நேரத்துல நின்னுடுது. அப்படி புடிக்குற வெறும் 8 குடம் தண்ணியை வச்சிக்கிட்டு என்னங்க செய்யுறது? தண்ணீர் வராட்டியும், வருஷா வருஷம் தண்ணீர் வரி கட்டிக்கிட்டுதான் இருக்கோம். தண்ணி இல்லாததால தினமும் 3 மைல் தூரம் வேகாத வெயில்ல நடந்துபோய் தண்ணி எடுத்துட்டு வர்றோம். முடியாதவங்க ஒரு லாரிக்கு 1,500 ரூபாய் கொடுத்து தண்ணி வாங்கிக்கிட்டு இருக்காங்க. நாங்க இதுசம்பந்தமா பலதடவை புகார் கொடுக்கவும், உங்களுக்கு போர் போட்டுத் தர்றோமுன்னு வந்து இடத்தை எல்லாம் பாத்துட்டு அளந்துட்டுபோனாங்க. ஆனா, இப்ப வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. கேட்டா, நிதி வந்தா ஏற்பாடு செஞ்சித் தர்ரோமுனு சொல்றாங்க. உள்ளாட்சித் தேர்தல் வந்தாதான் வேலைக்கு ஆகும்னு சொல்றாங்க. எங்களுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செஞ்சா புண்ணியமா போகுமுங்க” என்றனர்.