வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (24/04/2018)

கடைசி தொடர்பு:09:49 (24/04/2018)

'மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்; நடனத்துக்கு தடை விதியுங்கள்'- கலெக்டரிடம் முறையிட்ட பழங்குடியினர்

மன உளைச்சலுக்கு ஆளாகி எங்களில் சிலர் தற்கொலை செய்யும் அளவுக்கு  செல்கின்றனர்

 

கலெக்டரிடம் முறையிட்ட பழங்குடியினர்

ஆபாச நடனத்துக்கு தடைவிதிக்கக் கோரி, மதுரை வனவேங்கைகள் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் இரணியன் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ''வனவேங்கைகள் பேரவையில் சுமார் 20 லட்சத்துக்கும் மேலாக உள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு முன்னேற்றம் ஏற்படவும், ஏனைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், ஜனநாயக முறைப்படி கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாகவும், எங்கள் கடின உழைப்பால் சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் இணையாக உயர்ந்துவரும் இந்த காலகட்டத்தில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் திருவிழாக் காலங்களில் தமிழகம் முழுவதும் பரவலாக ஆபாச நடனம் ஆடப்படுகிறது.

மேலும், ஆபாச நடனம் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இச்செயலால் எங்கள் சமூகத்தின் பெண்கள் மற்ற சமூகத்தினரால் கேலி கிண்டலுக்கு ஆளாகின்றனர்.  மிகுந்த துன்புறுத்தலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி, எங்களில் சிலர் தற்கொலைசெய்துகொள்ளும் அளவுக்குச்  செல்கின்றனர். ஆகவே, இவ்வாறு  நடக்கும் ஆபாச நடனங்களைத் தவிர்த்தும், இணையத்தில் இந்த பெயரில் பதிவேற்றம் செய்யப்படும் ஆபாச நடனங்கள் மற்றும் காட்சிகளைத் தடை செய்ய வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளனர்.