வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (24/04/2018)

கடைசி தொடர்பு:09:40 (24/04/2018)

2 குழந்தைகளைக் கொன்றது ஏன்? உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தாயார் கண்ணீர் வாக்குமூலம்

நோயினால் நான் மிகவும் வேதனையடைந்து வந்தேன். இதனால் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அப்போது மாமியார் மற்றும் ஊர்மக்களால்காப்பாற்றப்பட்டேன்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, முட்டம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் வினோத் (30). இவரது மனைவி சசிகலா (26).
இவர், வினோத்தின் அத்தை மகள் ஆவார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது.

தற்போது வினோத்  வெளிநட்டில் வேலைபார்த்துவருகிறார். சசிகலா டிப்ளமோ நர்ஸிங் படித்துள்ளார்.  இவர்களுக்கு வரோகா ( 3), விஜயஸ்ரீ ( 3மாதம்) என இரு பெண் குழந்தைகள். முதல் குழந்தை முட்டத்தில் உள்ள பாட்டியுடன் வசித்துவருகிறார். இரண்டாவது குழந்தையுடன்  சசிகலா திருச்சியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்துவருகிறார். விஜயஸ்ரீ, அறுவை சிகிச்சைமூலம் பிறந்ததால், சசிகலாவுக்கு  அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அவர், மன வேதனையில் இருந்துவந்தார்.

சசிகலா

இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன், சசிகலா சிகிச்சை பெற கணவர் வீடான முட்டத்திற்கு குழந்தைகளுடன் வந்து தங்கி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சிகிச்சைபெற்றுவந்தார். சம்பவத்தன்று, சசிகலா தனது வீட்டில் ஜன்னல் கம்பியில் துப்பட்டாவை கொண்டு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த மாமியார் விஜயா அலறியுள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச் சென்று சசிகலாவைக் காப்பாற்றினார்கள். அப்போது, வீட்டில் இரு குழந்தைகளும் இறந்துகிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்குத் தகவல்  கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச்  சென்ற சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ஜவஹர்லால், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர்  ஷியாம்சுந்தர் மற்றும் போலீஸார்,  இறந்த குழந்தைகளின்  உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சசிகலாவை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சசிகலா சேர்க்கப்பட்டுள்ளார். அவர், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ''நான் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளேன். எனது மாமன் மகனையே காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு திருமணம்  ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை ஆபரேஷன் மூலம் பிறந்தது. இதனால் எனக்கு பசியின்மை நோய் ஏற்பட்டு தொடர்ந்து பாதிக்கப்பட்டேன். இதனால், தொடர்ந்து சாப்பிடமுடியாமலும், செரிமானப் பிரச்னையால் வயிற்றுவலியும் இருந்தது. அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். நோயினால் நான் மிகவும் 
வேதனையடைந்து வந்தேன். இதனால், குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றேன்.

அப்போது, மாமியார் மற்றும் ஊர்மக்களால் காப்பாற்றப்பட்டேன். நான் மட்டும் தற்கொலை செய்துகொண்டு குழந்தைகளை உயிரோடு விட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், என் தந்தையின் உறவினர் ஒருவர் 7 குழந்தைகளை விட்டுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு அவரது கணவன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அந்தக் குழந்தைகள் சித்தியால் பல துன்பங்களை அனுபவித்தனர். இதனால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு நாமும் தற்கொலை செய்துகொண்டால் எனது கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்வார் என்ற எண்ணத்தில் கொலை செய்தேன்'' என்று கண்ணீல் மல்கக் கூறினார். இது குறித்து  போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.