வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (24/04/2018)

கடைசி தொடர்பு:09:47 (24/04/2018)

``குட்கா வழக்கு நீர்த்துப் போகும்வரை அதிகாரிகள் தூக்கியடிப்பு தொடரும்!" - சமூக ஆர்வலர்கள்

காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னை, நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் எனத் தமிழக அரசியல் களம் அனல் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி மிக சைலண்ட்டாக காவல்துறையில் ஐந்து ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி. குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக இருந்த மஞ்சுநாதா ஐ.பி.எஸ் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக இருந்த மஞ்சுநாதா காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதிதான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் அந்தப் பதவிக்கு வந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறையில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறிப்பாக துணைவேந்தர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர் மஞ்சுநாதா. முன்னாள் துணைவேந்தர்கள் வணங்காமுடி, கணபதி ராஜாராம் ஆகியோரின் மீது வழக்குகளைப் பதிவு செய்தவர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம்   - குட்கா வழக்கு

மஞ்சுநாதாவை மாற்றியிருப்பது அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பேசுகையில், ``2014-ல் இருந்து 2016 வரை லஞ்ச ஒழிப்புத்துறையில் ரெய்டு நடக்கவே இல்லை. மஞ்சுநாதா இந்தத் துறைக்கு வந்தபிறகு 50-க்கும் மேற்பட்ட ரெய்டுகள் நடந்துள்ளன. குட்கா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருந்தோம். அதனைத் தொடர்ந்தே நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருந்தார் மஞ்சுநாதா. குட்கா வழக்குதான் அவருடைய மாற்றத்துக்கு முதன்மையானக் காரணமாகச் சொல்லப்படுகிறது.ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் இயக்கம் 

குட்கா வழக்கில் உண்மையானக் குற்றவாளிகள் மீது இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள அதிகாரிகளை தமிழக அரசு தொடர்ந்து மாற்றி வருகிறது. அதேபோன்று லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆணையராக இருந்த ஜெயக்கொடி, அந்தப் பதவிக்கு வந்த 6 மாத காலத்துக்குள் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக மோகன் பியாரே என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். குட்கா வழக்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், தற்போது மஞ்சுநாதா மாற்றப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. 

ஒரு வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அந்த அதிகாரியை மாற்றுவது அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காகத்தான். அந்த வேலையைத்தான் தமிழக அரசு திறம்பட செய்து வருகிறது. குறிப்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தனது தீர்ப்பில் 'யாருடைய தலையீடும் இல்லாமல் மிகச் சுதந்திரமாக இந்த வழக்கு விசாரணை நடக்க வேண்டும்' எனக் கூறியிருந்தது. தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கையைப் பார்க்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை யாருடையப் பிடியில் சிக்கி இருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் மஞ்சுநாதாவை மாற்றியிருப்பதன் மூலம்  நீதிமன்றத்தின் உத்தரவையே தமிழக அரசு மீறியுள்ளது. 

குட்கா வழக்கில், தொடர்புடைய அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்போவதாக மஞ்சுநாதா எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே அவரைத் தமிழக அரசு தூக்கி அடித்தாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், குட்கா வழக்கை விசாரித்த மற்றொரு புலனாய்வு இளங்கோ சட்டப்பஞ்சயாத்து இயக்கம் அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில், அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில், யாருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும் என்றால், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்கிறார்.

இதுகுறித்துப் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலத் தலைவர் சிவ.இளங்கோ, "கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவச் சேவை கழகத்தில் (directorate of medical service) நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி இருந்தோம். எங்களுடைய அந்த மனுவை மருத்துவச் சேவைகள் கழகத்துக்கு அனுப்புவதற்குப் பதிலாக மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு (directorate of medical education) அனுப்பி வைத்திருந்தது. எப்படியான அதிகாரிகள் அந்தத் துறையில் இருக்கிறார்கள் என்பதை இந்தச் செயல் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்கள் எவ்வாறு குட்கா வழக்கை நேர்மையாக நடத்துவார்கள்? ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ... அதன்படி நடக்கிற அதிகாரிகள் இருக்கும் வரை குட்கா வழக்கு அல்ல... மற்ற எந்த வழக்கும் நேர்மையாக நடைபெறாது" என்கிறார் இளங்கோ!


டிரெண்டிங் @ விகடன்