வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (24/04/2018)

கடைசி தொடர்பு:10:42 (24/04/2018)

'கிராமத்தில் எந்த வசதியும் இல்லை; பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க'- பெண் கலெக்டரிடம் குமுறிய இளைஞர்கள்

அடிப்படை வசதிகள் இன்றி, சில வருங்களாக அவதிப்பட்டுவருவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் நடத்தும் குறைதீர் கூட்ட அரங்கையும், மாவட்ட ஆட்சியரையும் கீழ சேத்தூர் மக்களும் இளைஞர்களும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் லதா, 'உங்கள் பிரச்னை  பற்றி எனக்கு இப்போதுதான் சொல்லியிருக்கிறீர்கள். தண்ணீர் பிரச்னைகுறித்து எனக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் சொல்லியிருக்கலாமே' என்று தெரிவித்தார். 'மேடம் நீங்க எங்க ஊருக்கு ஒருமுறை வந்து பாருங்க. எவ்வளவு கஷ்டப்படுகிறோம்' என்று. அப்போது கலெக்டர், 'மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இருக்கின்றன. எல்லா கிராமத்துக்கும் நான் போக முடியுமா? உங்க குறைகளை என்னிடம் சொல்லிட்டீங்க. உங்க ஊருக்கு முதல்ல தண்ணி பிரச்னையைச் சரி பண்ணுவோம்' எனச் சொல்லி அக்கிராம மக்களை சமாதனப்படுத்தி அனுப்பிவைத்தார் மாவட்ட ஆட்சியர் லதா.

keela sethur village

இதுகுறித்து கீழ சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரிடம் கேட்டபோது, "சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியம், மாரந்தை ஊராட்சிக்கு உட்பட்ட  கீழச் சேத்தூர் கிராமத்தில், 120 குடும்பங்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக குடிதண்ணீர் கஷ்டம் எங்களுக்குத் தீரவில்லை. ஆடு, மாடுகள் குடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுவருகிறோம். குடிதண்ணீர் எடுப்பதற்காக, சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் வல்லக்குளம், தோக்கனேந்தல் கிராமங்களுக்குச் சென்று  தண்ணீர் எடுத்துவந்து குடிக்க பயன்படுத்திவருகிறோம். எங்கவீட்டுப் பிள்ளைகள் குளிப்பதற்குத் தண்ணீர் இல்லை.

எங்கள் ஊருக்கு வரும் ரோடு குண்டும்குழியுமாக இருக்கிறது. தெரு விளக்குகள் எரியவில்லை. இதே நிலைமை நீடித்தால், நாங்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டியதுதான். 2016-20-ம் ஆண்டில் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் அமைக்கப்பட்ட போர்வெல் மோட்டார்ஸ் காணவில்லை.

keela sethur village people

எங்க ஊரில் உள்ள இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க மறுத்துவருகிற கொடுமை இருக்கிறது. இதற்காகவே, காளையார்கோயில் சென்று அங்கு வாடகைக்கு வீடுபிடிக்கவேண்டியிருக்கிறது. எங்கள் சொந்த மண்ணை விட்டு, அடிப்படை வசதி இல்லாததால் நகரத்தை நோக்கி படையெடுக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இதற்காகத்தான், தமிழக அரசு வழங்கிய  வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க இருக்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க