'அருப்புக்கோட்டை அரண்கள்' ஃபேஸ்புக் பேஜுக்கு நிர்மலா தேவி ஆடியோ வந்த கதை! | The story behind niramaladevi audio came to facebook page

வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (24/04/2018)

கடைசி தொடர்பு:12:18 (24/04/2018)

'அருப்புக்கோட்டை அரண்கள்' ஃபேஸ்புக் பேஜுக்கு நிர்மலா தேவி ஆடியோ வந்த கதை!

நிர்மலா தேவி

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடன் செல்போனில் பேசிய ஆடியோ, 'அருப்புக்கோட்டை அரண்கள்' என்ற முகநூல் அட்மினுக்குக் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், புற்றீசல் போல தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாவதால், சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்ற பீதியில் அவர்கள் இருந்துவருகின்றனர். நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி தொடங்கி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வரை நிர்மலா தேவி கைது, விவாதப் பொருளாகியுள்ளது. 

நிர்மலா தேவி ஆடியோ விவகாரம், எப்படி வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்று விசாரித்தோம். 'அருப்புக்கோட்டை அரண்கள், என்ற முகநூலில்தான் நிர்மலா தேவியின் ஆடியோ, ஏப்ரல் 13-ம் தேதி அப்லோடு செய்யப்பட்டுள்ளது. அந்த முகநூலின் அட்மின் தங்கபாண்டியன். இவர், வழக்கறிஞர் என்ற தகவல் தெரியவந்ததும் அவரிடம் பேசினோம். 

 "கடந்த மார்ச் மாதத்தில், சம்பந்தப்பட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், என்னை சந்தித்தனர். பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடன் பேசும் ஆடியோவை அவர்கள் என்னிடம் கொடுத்தனர். அந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததோடு, மாணவிகள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை கவனமாகக் கையாள முடிவுசெய்தேன். அந்த ஆடியோகுறித்த பின்புலன்களை விசாரிப்பதற்குள், நிர்மலா தேவி குறித்த செய்திகள் அரசல்புரசலாக வெளியாகின. சம்பந்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்தது. அத்துடன், ஆடியோ விவகாரத்தை மூடிமறைக்கவே சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்தனர்.

வழக்கறிஞர் தங்கபாண்டியன்

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பினர் என்னை சந்தித்துப் பேசினர். அவர்கள், நிர்மலா தேவி குறித்து கல்லூரியில் செயல்படும் கமிட்டியில் மார்ச் மாதத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏனெனில், அந்த கமிட்டியில்  நிர்மலா தேவியும் ஒரு உறுப்பினர். இந்தப் பிரச்னைகுறித்து நிர்மலா தேவியிடம் விசாரித்தவர்களிடம், 'நீ யோக்கியமா, உன் கதையை நான் சொல்லட்டுமா' என்று நிர்மலா தேவி கேட்டுள்ளார். அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதவர்கள், மாணவிகளின் புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை இல்லாததால், நிர்மலா தேவி பேசிய ஆடியோவோடு, பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பினர் பல இடங்களில் நியாயம் கேட்டு அலைந்துள்ளனர். அதன்பிறகே, அவர்கள் என்னை சந்தித்தனர்.

இந்தச் சமயத்தில்தான், நிர்மலா தேவியின் ஆடியோவை என்னுடைய முகநூலில் மாணவிகளின் பெயர்களை அழித்து, உரையாடலை மட்டும் ஏப்ரல் 13-ம் தேதி பதிவு செய்தேன். அது,  மற்ற சமூக வலைதளத்தில் வெளியாகி, வைரலானது. மீடியாக்களும் நிர்மலா தேவி செய்தியைக் கையில் எடுத்தது. இதனால், பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய பிறகே நிர்மலா தேவி மீது நடவடிக்கை பாய்ந்தது. சம்பந்தப்பட்ட கல்லூரியை சில மாணவ அமைப்புகள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகே, கல்லூரி செயலாளர் ராமசாமி, அருப்புக்கோட்டை டவுன் போலீஸில் புகார் கொடுத்தார். அதுவரை போலீஸார், மாணவிகளின் புகார்களை தட்டிக்கழித்துவந்தனர். புகாரின்பேரில் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட பிறகு, விசாரணையின் கோணம் மாறியிருக்கிறது. இதற்கிடையில், நிர்மலா தேவிக்கு எதிராக வாய் திறக்காமலிருக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டுள்ளது. நிர்மலா தேவி விவகாரத்தில் நியாயமாக விசாரித்தால் மட்டுமே அவரின் பின்புலத்தில் இருப்பவர்களின் முகத்திரையைக் கிழிக்க முடியும்" என்றார்.