`இன்னும் ரொம்பக் காலம் வாழ்வான் என் மகன்' - 5 உடல் உறுப்புகளைத் தானம்செய்த மாணவனின் தந்தை உருக்கம்

மூளைச்சாவு அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர், 5 பேருக்கு வாழ்வளித்துள்ளார். "இன்னும் ரொம்பக் காலம் என்னுடைய மகன் வாழ்வான்" என்று மாணவனின் தந்தை உருக்கமாகக் கூறினார்.


மாணவர்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ளது, பசுக்காரன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவர், தனது மகன் ராஜேஸ்கண்ணாவை, அந்தப் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்த்து மெக்கானிக்கல் பாடப் பிரிவில் படிக்கவைத்தார். தற்போது, 3-ம் ஆண்டு படித்துவரும், ராஜேஸ்கண்ணா, தினமும் அவர் படிக்கும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வார். கடந்த 17-ம் தேதி, வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்ற ராஜேஸ் கண்ணா, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர், திருச்சி தில்லைநகரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏதுமின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதுபற்றி அவருடைய பெற்றோரிடம் கூறிய மருத்துவர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் சகஜ நிலைக்குத் திரும்புவது மிகவும் அரிது என்பதால், ராஜேஸ் கண்ணாவின் உடல் உறுப்புகளைத் தானம் வழங்க ஆலோசனை வழங்கினர். அதையடுத்து, அவரின் பெற்றோர் ராஜேஸ் கண்ணாவின் உடலை வழங்கிட சம்மதித்தனர். இதை அடுத்து, ராஜேஸ் கண்ணாவின் உடல் உறுப்புகளை மருத்துவர்கள், நேற்று அறுவைசிகிச்சைமூலம் அகற்றினர். அவரது இதயம், திருச்சியிலிருந்து விமானம்மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாதுகாக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ்மூலம் திருச்சி தில்லைநகரிலிருந்து 10 நிமிடத்தில் திருச்சி விமானநிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பிறகு, அங்கிருந்து தனி விமானம்மூலம் சென்னை கொண்டுசென்றனர். இதயம் மட்டுமல்லாமல், ராஜேஸ் கண்ணாவின் 2 கண்கள், திருச்சியில் உள்ள கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று, கல்லீரல் ஆகியவை அறுவைசிகிச்சை மேற்கொண்ட அதே தனியார் மருத்துவமனையில், உறுப்புகள் செயலிழந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. இந்த உடல்உறுப்பு தானம் மூலம் 5 பேர் வாழ்வுபெற்றுள்ளனர்.

கண்ணீருடன் ராஜேஸ்கண்ணாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, “ஆசை ஆசையாய் பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்துட்டு நிற்கிறோம். அவனின் உடல் உறுப்புகளைத் தானம் வழங்கியதன்மூலம், எனது மகன் ராஜேஸ்கண்ணா இன்னும் ரொம்பக் காலம் வாழ்வான். இதேபோல மற்றவர்களும் உடல்உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும்'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!