வேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்! | police sub inspector joseph commits suicide in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (24/04/2018)

கடைசி தொடர்பு:11:35 (24/04/2018)

வேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்!

சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜோசப், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை

தமிழகத்தில், கடந்த சில மாதங்களாகக் காவல் துறையினர் தற்கொலைசெய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு, குடும்பத் தகராறு, பணிச் சுமை ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகின்றன. இருப்பினும், பணிச்சுமையே முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது.

திருநெல்வேலியைச் சேர்ந்த 56 வயதான ஜோசப் என்பவர், சென்னை கொருக்குப்பேட்டை H4 காவல் நிலைய குற்றப்பிரிவில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். நேற்று இரவு பணிக்கு வர வேண்டியவர் வரவில்லை. அவர் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் உள்ள வேலிகாத்தான் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஜோசப்பின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். 

முதலில், துறைமுகம் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த ஜோசப், சில மாதங்களுக்கு முன்பு கொருக்குப்பேட்டை காவல் நிலையத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். குடும்பப் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல்துறையில் தொடரும் தற்கொலை சம்பவங்கள், மற்ற காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.