ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி... மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த உதவுமா? | Benefits of Learning Psychology Education For Teachers and students

வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (24/04/2018)

கடைசி தொடர்பு:11:13 (24/04/2018)

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி... மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த உதவுமா?

சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி... மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த உதவுமா?

சில நாள்களுக்கு முன்னர், ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. ஒரு பள்ளியின் வகுப்பறை. மாணவர்களில் ஒருவன் வகுப்பறைக்கு தாமதமாக வருகிறான். ஆசிரியர் அவனின் கையை நீட்டச் சொல்கிறார்; பிரம்பால் அடிக்கிறார். அடுத்த நாளும் அதேபோல் தாமதமாக வந்து அடி வாங்குகிறான் மாணவன். இந்த நிகழ்வு தினமும் தொடர்கிறது. ஒரு நாள் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே அந்த மாணவன், ஆசிரியர் அவனை அடிப்பதற்குத் தோதாகக் கையை நீட்டுகிறான். ஆசிரியரும் அதற்காகவே காத்திருந்ததுபோல தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவனை வெளுத்து வாங்குகிறார்.

குழந்தைகளின் உளவியல்

ஒரு நாள் அதிகாலை. அந்த ஆசிரியர் ஜாக்கிங் போய்க்கொண்டிருக்கிறார். தினமும் அவரிடம் அடிவாங்கும் அந்த மாணவனைப் பார்க்கிறார். அவன் ஒரு சைக்கிள் கேரியரில் நாளிதழ்களை வைத்துக்கொண்டு வீடு வீடாக பேப்பர் போட்டுக்கொண்டிருக்கிறான். அப்போதுதான் ஆசிரியருக்கு அந்தப் பையனின் குடும்பச் சூழல் புரிகிறது. அன்றும் வழக்கம்போல் அந்தப் பையன் தாமதமாக வருகிறான். வகுப்பறைக்குள் நுழைந்ததுமே ஆசிரியர் அடிப்பதற்குத் தோதாக கையைத் தாழ்த்தி நீட்டுகிறான். ஆசிரியர், தன் கையிலிருந்த பிரம்பைக் கீழே போட்டுவிட்டு. அவனைக் கட்டியணைத்துக்கொண்டு கண்ணீர்விடுகிறார். ஒரு வசனம்கூட இல்லாமல், ஒரு மாணவனின் வறுமைச் சூழலை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது அந்தக் குறும்படம்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குடும்ப அமைப்பு இருக்காது; ஒரே மாதிரியான பொருளாதாரச் சூழலும் இருக்காது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு நெருக்கடி இருக்கலாம். சமூகத்தால் மாணவனுக்கு ஏதாவது பிரச்னைகள் இருக்கலாம், அதன் காரணமாக, மாணவனோ, மாணவியோ படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

ஏற்கெனவே மன நெருக்கடியிலிருக்கும் மாணவனை / மாணவியை சரியாகப் படிக்கவில்லை என்று ஆசிரியர்கள் திட்டினால், மேலும் மன உளைச்சலுக்குத்தான் ஆளாவார்கள். மாணவர்கள் பசியோடிருந்தால், அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதற்காகத்தான் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் மனதளவில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்தால்தான், அவர்களை படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த வைக்க முடியும்.

குழந்தைகள் உளவியல்

அதற்கான வேலைகளை முன்னெடுத்திருக்கிறது சென்னை மாநகராட்சி. `முதற்கட்டமாக, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 300 ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தயார்நிலையில் இருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள், அவரவர் பள்ளியின் உளவியல் ஆலோசகராகப் பொறுப்பேற்பார்கள். படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவார்கள்’ என்று சென்னை மாநகராட்சியின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் (கல்வித்துறை) மகேஷ்வரி ரவிக்குமார் இந்தத் திட்டம் உருவான விதம் குறித்து விளக்குகிறார்...

``தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உளவியல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய அந்தந்தப் பள்ளிகளில் உளவியல்மகேஷ்வரி ரவிக்குமார் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கிறார்கள். குறிப்பாக, தேர்வு பயத்தைச் சமாளிப்பது குறித்து ஏராளமான ஆலோசனைகள் வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல பொருளாதாரப் பின்புலத்தில், குடும்பச் சூழலில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கே உளவியல்ரீதியான ஆலோசனைகள், அறிவுரைகள் தேவைப்படுகிறதென்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதைவிடப் பலமடங்கு பிரச்னைகள், மன நெருக்கடிகள் இருக்கும் அல்லவா? அதனால், அவர்களால் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த முடியாது. அந்தக் குறையைப் போக்குவதற்காக மாணவர்களுக்கு உளவியல்ரீதியான ஆலோசனைகளை வழங்க இந்தத் திட்டம் (ஸ்பார்க் - Spark Integration Programme) தொடங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில், குழந்தைகளுக்கான மனநல மருத்துவர்கள் குறைவாக இருக்கிறார்கள். அதன் காரணமாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதற்கட்டமாக வெவ்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 300 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அவரவர் பள்ளியில் உளவியல் ஆலோசகராக இருப்பார்கள். மாணவர்களின் பழக்கவழக்கங்களில், செயல்பாடுகளில் ஏதேனும் மாறுபாடு தெரிந்தால், அதைக் கண்டறிந்து, அதற்கான காரணங்களைக் கேட்டறிவார்கள். அதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். ஆசிரியர்களால் சரிசெய்ய முடியாத பட்சத்தில் மருத்துவர்களுக்குச் சிபாரிசு செய்து, சரிசெய்வார்கள். அதற்கு மாநகராட்சி உதவி செய்யும்." என்கிறார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபுகல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் இதுகுறித்துப் பேசினோம்...

``ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சிகள் வரவேற்கக்கூடியதே. குழந்தைகளின் உளவியலையும், சமூக உளவியலையும் ஆசிரியர்கள் அப்டேட் செய்துகொள்வது நல்லது. அதற்கு இந்தப் பயிற்சிகள் பயனளிக்கும். சமூகச் சிக்கல்கள் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே வருகின்றன. அதைச் சமாளித்து மாணவர்களைப் படிப்பில் எப்படிக் கவனம் செலுத்தவைப்பது என்பது குறித்து ஆசிரியர்கள் கண்டிப்பாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். பிறகு மாணவர்களை அந்தப் பாதையில் வழிநடத்த வேண்டும். தற்போதைய சூழலில் தனிப்பட்ட குடும்பச் சிக்கல்களைவிட, சமூகச் சிக்கலால்தான் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, சாதி சார்ந்த ஒடுக்குமுறைகளால் மாணவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்போடு, அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இது போன்ற சிக்கல்களைச் சரி செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் மனநிலையைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். இதுபோன்ற பயிற்சிகள் மருத்துவர் ரவீந்திரநாத்அதற்குக் கண்டிப்பாக உதவிபுரியும். தற்போதைய சமூகச் சிக்கல்களை சரியாகப் புரிந்துகொண்டு, பேருக்காக இல்லாமல் சரியாகச் செயல்படுத்தினால் இது மிகவும் சிறப்பான ஒரு திட்டமாக அமையும்’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் இதுகுறித்துச் சொல்கிறார்...

``நல்ல முயற்சி இது. ஆனால், இது மட்டுமே போதாது. மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்களின் பொருளாதாரரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும். விடுதிகளை அதிகப்படுத்தி, ஏழை மாணவர்கள் விடுதிகளில் தங்கி, அதாவது குடும்பச் சூழலிலிருந்து மீண்டு, படிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். குறிப்பாக, ஏழை மாணவிகளுக்கு அதைச் செய்ய வேண்டும்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்