வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (24/04/2018)

கடைசி தொடர்பு:12:25 (24/04/2018)

மயக்க மருந்தைத் திருடி போதை ஊசியாக மாற்றி விற்பனை! கோவையில் சிக்கிய கும்பல்

கோவை மயக்க மருந்து திருட்டு கும்பல்

கடந்த சில மாதங்களாக, கோவையில் உள்ள மருத்துவமனைளில் புகுந்து மயக்க மருந்தை குறிவைத்துத் திருடிக்கொண்டிருந்த  கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கோவை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சமீபகாலமாக, கோயம்புத்தூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பெரும் பதற்றத்தோடு இருக்கின்றன.  மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மயக்க மருந்தை திட்டமிட்டுத் திருடும் கும்பல் கோவையில் அதிகரித்துவிட்டதுதான், அந்த பதற்றத்துக்கான காரணம். 

மருத்துவமனைகளிலிருந்து திருடப்படும்  மயக்க மருந்தை, குளுக்கோஸுடன்  கலந்து போதை ஊசியாக மாற்றுகிறது அந்த திருட்டுக் கும்பல். பின்பு, அதை  கல்லூரி இளைஞர்களுக்கு விற்று காசுபார்க்கிறது. இந்த போதை நெட்வொர்க், கோவையில் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து, அந்த மயக்க மருந்தைத்  திருட முயன்ற அப்துல்ரகுமான் என்பவரை கையும்களவுமாகப் பிடித்த மருத்துவமனை ஊழியர்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அப்துல்ரகுமானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மயக்க மருந்து திருட்டில்  மகேந்திரன், அஜய் என்ற இருவருக்கும் பங்கிருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள்,  ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் மயக்க  மருந்தைத் திருடி, போதை ஊசியாக மாற்றி விற்பதற்கென்றே கோவையில் ஐந்து கேங் இருப்பதும், இந்த போதை ஊசிக்கு  பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு பயங்கர டிமாண்ட் இருப்பதால், அங்கு கொண்டுசென்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் அம்பலமானது. இதையடுத்து அப்துல்ரகுமான், மகேந்திரன், அஜய் ஆகிய மூன்றுபேரும்  நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய பின்பு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கவும், இவர்களின் நெட்வொர்க்குறித்து விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அப்போது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரலாம் என்று சொல்லப்படுகிறது.