வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (24/04/2018)

கடைசி தொடர்பு:13:00 (24/04/2018)

`நூத்துல இருபது பேருக்கு ஆஸ்துமா'- கல்குவாரிகளால் கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் நூற்றுக்கு இருபது பேர்களுக்கு ஆஸ்துமா பிரச்னை இருப்பதாக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். அதற்கு காரணம், அங்கு கணக்கு வழக்கில்லாமல் இயங்கும் கல்குவாரிகள்தான் என்கிறார்கள்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி ஒன்றியங்கள் வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் விவசாயம் என்கிற நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். இங்குள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்பை பிரதானமாக கொண்டுள்ளார்கள். ஆனால், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இங்கு ஆரம்பிக்கப்பட்ட கல்குவாரி, இன்று நூற்றுக்கணக்கான கல்குவாரிகளாக பெருகி நிற்கிறது. இந்த ஒன்றியங்களில் எங்கு பார்த்தாலும் பொக்லைன், கல் உடைக்கும் மெஷின்கள் பாறைகளை குடைந்து கற்களை வெட்டி எடுத்துக்கொண்டே இருக்கின்றன. நூற்றுக்கணக்கான லாரிகள் கற்களை ஏற்றிக்கொண்டு பெரும் சத்தத்துடன் போகின்றன. எங்கு பார்த்தாலும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. அதேபோல், வெடி வைத்தும் பாறைகளை உடைப்பதால், அந்த அதிர்வில் பல கிராமங்களில் வீடுகள் விரிசல் விழுந்துவிட்டதாக மக்கள் புலம்புகிறார்கள்.

இதுபற்றி, அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். ``இந்தப் பகுதியில் ஏகப்பட்ட கல்குவாரிகள் இயங்கி எங்க நிம்மதியைக் கெடுக்கின்றன. எந்நேரமும் வாகன இரைச்சலும் வெடிச்சத்தமும் புழுதி மண்டலமுமாக இருக்கு. எப்போதும் நாங்கள் கல்குவாரி புழுதியோடு வாழ்வதால், இங்குள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நூத்துல இருபது பேர்களுக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கு. அதோட, இந்தப் பகுதி வெப்ப பகுதியா மாறிட்டு வருது. இங்குள்ள கிராமங்களில் உள்ள சாலைகள் கல்குவாரியில் இருந்து போகும் வாகனங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அமைக்கப்படும் சாலைகளின் பாரம் தாங்கும் திறன் வெறும் 5 டன்தான். ஆனால், இங்கே செல்லும் வாகனங்கள் 30 முதல் 50 டன் வரை பாரம் ஏற்றிச் செல்வதால்,15 வருடங்கள் பயன்படக்கூடிய சாலைகள் வெறும் 5 வருடங்களிலேயே குண்டும் குழியுமாக மாறி, நாசமாக போய்விடுகிறது. அதனால், இங்குள்ள கல்குவாரிகளுக்கு அரசு தடை போடணும். இல்லைன்னா, நாங்க கிராமங்களை காலி பண்ணிக்கொண்டு போகும் நிலை உருவாகும்" என்று கண்ணீருடன் வேதனை தெரிவித்தனர்.