வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (24/04/2018)

கடைசி தொடர்பு:14:40 (24/04/2018)

கண்டுகொள்ளாத போலீஸ்... இளைஞர்களால் மாற்றுத்திறனாளிக்கு நடந்த கொடுமை!

மாற்றுதிறனாளியான பிச்சைகராரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணத்தை பிடிங்கி கொண்டு சென்ற இளைஞர்கள்

''என்னைத்  தாக்கிவிட்டு, என்னிடம்  இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் பிடிங்கிக்கொண்டு ஓடிவிட்டார்கள். வீட்டு வாடகைக்குத் தருவதற்காக குருவி சேர்ப்பதுபோல சேர்த்து வைதிருந்த பணம். பணம் போனாலும் பராவாயில்லை. தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரத்தம் சொட்டிய நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் போராடியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளைஞர்களால் மாற்றுத்திறனாளிக்கு நடந்த கொடுமை!

தஞ்சாவூரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டு வளாகத்தின் உள்ளே, மாநகராட்சி சார்பில் நிர்வகிக்கப்படும் ராஜப்பா பூங்கா உள்ளது. அதன் எதிரே, காதர் என்ற மாற்றுத்திறனாளி பிச்சை எடுத்துவருகிறார். நேற்று மாலை, சூரியன் தன் அனலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டிருந்தது. நீண்ட  நேரமாக வெயிலில் உட்கார்ந்திருந்த காதர், சற்று இளைப்பாறுவதற்காக எதிரே இருந்த பூங்காவுக்குச் சென்றார். அப்போது, 5 இளைஞர்கள் அவரை கிண்டல் செய்தபடி இருந்திருக்கின்றனர். அதற்கு அவர், தம்பிங்களா நான் உங்களைப் போல ஆரோக்கியத்தோடு இருப்பவன் இல்லை. எனக்கு கால்கள் ஊனம். சரியான வேலை கிடைக்கவில்லை. என் குடும்பத்தைக் காப்பாத்த என்னோட கனவுகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மனவலியோடு பிச்சை எடுத்துவருகிறேன்'' என்றிருக்கிறார்.

அதற்கு அந்த இளைஞர்கள், 'எங்களையே எதிர்த்துப் பேசுறியா?' என காதரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், கண்ணுக்குக் கீழேயும் மூக்குப் பகுதியிலும் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய ஆரம்பித்தது. 'முடியாத என்னிடம் வீரத்தை காட்டுறீங்களே? என்னை விட்டுடுங்க' என போராடியிருக்கிறார்.  அதைக் கேட்காத அந்த அரக்க இளைஞர்கள், காதரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டு பூங்காவுக்குள் ஓடிவிட்டனர். இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கும்போதே, சிலர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். ரதிதேவி என்ற பெண் போலீஸ், சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து, காதரை அடித்துக்கொண்டிருந்தவர்களை விளக்கிவிட்டார். ரதிதேவிக்குக் கொஞ்சம்கூட அவர்கள் அஞ்சவில்லை. 'நான் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை. ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்திருக்கேன். வேறு போலீஸ் வருவார்' என கூறிவிட்டு கிளம்பிவிட்டார். இதற்கிடையில் விஷயம் கேள்விப்பட்டு, காதரின் மனைவி மற்றும் பெண் ஒருவர் தன் கையில் குழந்தையோடு சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

''ஒரு மாற்றுதிறனாளியை போய் இப்படி அடிச்சிருக்காங்களே... 50 பேர் சுற்றி நின்னுகிட்டு இப்படி வேடிக்கை பார்த்திருக்கீங்களே'' என தேம்பி அழ ஆரம்பித்தார். ''குருவி சேர்க்கிற மாதிரி வீட்டு வாடகை கொடுப்பதற்கு ஆயிரம் ரூபாய் சேர்த்து வச்சிருந்தேன். என்னையும் அடித்து என் பணத்தையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். போலீஸ் இன்னும் வரவில்லை. அவர்கள் உள்ளேதான் ஒழிந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க வேண்டும். பிச்சை எடுத்தாலும்  நான் ஒரு மனிதன். பிச்சை எடுப்பதனால் என்னை கண்டுக்க மாட்டீங்களா?'' என சாலைக்கு நடுவே சென்று கதறியிருக்கிறார். அங்கு கூடியிருந்தவர்கள் சிலர், அவரை சமாதானப்படுத்தி ஓரமாக அழைத்துவர, 'விட்டு டுங்க சார். நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்' என விரக்தி மன நிலையில் பேசியிருக்கிறார். அப்போது, தினகரன் என்ற காவலர் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தார்.

அந்த இளைஞர், 'நான் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தேன். பணத்தை நான் எடுக்கவில்லை' எனத் திமிராகவே பதில் சொன்னான். அதைத் தாண்டி அவன் பேசவே இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு, எந்த முடிவும் இல்லாமல் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தார் தினகரன். 'நன்றாக இருப்பவர்களுக்கே எந்த நீதியும் கிடைக்காத இந்த சமூகத்தில், பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளியான எனக்கு மட்டும் நீதியா கிடைக்கப்போகிறது' என வழிந்த ரத்தத்தைக்கூட துடைக்காமல், தன் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினார் அழுதபடி. ராஜப்பா பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் கூட போலீஸார் மெத்தனமாக வருவது வேதனையளிக்கிறது. பிச்சைக்காரர் என்றும் பாராமல் காதருக்கு சிலர் ஓடி உதவி செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது  என்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க