வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (24/04/2018)

கடைசி தொடர்பு:13:04 (24/04/2018)

"காலையில் ஐஸ் வியாபாரம்... மதியம் கொள்ளை" - ஐந்து வருட வங்கிக் கொள்ளையனின் பகீர் வாக்குமூலம்

வங்கி கொள்ளை

காலையில் ஐஸ் வியாபாரம் செய்யும்போது நோட்டமிட்டு, மதியம் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவதாக, வங்கிக் கொள்ளையன் பரபரப்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். 

 சென்னை, அடையாறு இந்திரா நகரில் இந்தியன் வங்கி செயல்பட்டுவருகிறது. இங்கு, நேற்று வழக்கத்தைவிட வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதின. அப்போது, ஹெல்மெட் அணிந்தபடி வங்கிக்குள் நுழைந்த கொள்ளையன், 6 லட்சம் ரூபாயை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தான். பிறகு, டூவீலரில் தப்பிக்க முயன்ற கொள்ளையன் சுனிப் யாதவ்வை போக்குவரத்து போலீஸார் ஜோசப், ஷெரீப், முருகேசன், சாந்தகுமார் மற்றும் மோகன்ராஜ், மாணவன் ஜெயச்சந்திரன் ஆகியோர் மடக்கிப்பிடித்தனர். அப்போது கொள்ளையன், துப்பாக்கியால் சுட்டான். குறி தவறியதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த நிலையில், அடையாறு போலீஸ் நிலையத்தில் கொள்ளையனிடம் இணை கமிஷனர் மகேஷ்வரி தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கொள்ளையன் சுனிப் யாதவ், தன்னுடைய பெயரை சுனில் யாதவ், மணீஷ்குமார் என்று கூறியுள்ளான். இதனால், அவனது நிஜப் பெயர் என்ன என்று விசாரித்துவருகிறோம். மேலும், பீகாரைச் சேர்ந்த கொள்ளையன், சென்னை கேளம்பாக்கம் பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாகத் தங்கியுள்ளான். அவனுடன் இன்னும் சில வடமாநில வாலிபர்களும் தங்கியிருந்துள்ளனர். அவர்கள், ஐஸ் விற்கும் வியாபாரம் செய்துவருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து கொள்ளையனும் ஐஸ் வியாபாரம் செய்துள்ளான்; தண்ணீர் கேனும் போட்டுள்ளான். அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்றே கொள்ளையனாக மாறியதாகத் தெரிவித்தான். காலையில் ஐஸ் வியாபாரம் செய்தபடியே நோட்டமிடும் அவன், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கொள்ளையடிப்பதாகவும் கூறியுள்ளான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரிலிருந்து நாட்டுத் துப்பாக்கிகளை வாங்கிக்கொண்டு ரயிலில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.  

 வங்கி கொள்ளை

ஒவ்வொரு வங்கியாக அவன் நோட்டமிட்டபோது, அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கியில் காவலாளி இல்லை என்பதைக் கண்ட கொள்ளையன், அங்கு கைவரிசை காட்டத் திட்டமிட்டுள்ளான். டூவீலரில் வங்கிக்கு வந்தவன், ஹெல்மெட் அணிந்தபடியே மேலாளர் முகமது அஷரப்பிடம் கடன் தொடர்பாக ஆங்கிலத்தில் பேசியுள்ளான். அப்போது, ஹெல்மெட்டை கழற்றும்படி வங்கி மேலாளர் கூறியுள்ளார். உடனடியாக பேன்ட் பாக்கெட்டில் மறைத்துவைத்திருந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கியை எடுத்து, வங்கி மேலாளரை மிரட்டியுள்ளான்.

பிறகு, கேஷியரிடமிருந்து 6 லட்சத்து 36 ஆயிரத்தை துப்பாக்கி முனையில் பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோதுதான் எங்களிடம் சிக்கிக்கொண்டான். அவனிடமிருந்து இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளைப் பறிமுதல்செய்துள்ளோம். பிறகு, இரண்டு துப்பாக்கி தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளோம். மேலும் அவன், முன் எச்சரிக்கையாகவே செயல்பட்டுள்ளான். தனி நபராகவே வங்கிக்கு வந்துள்ளான். அவனது கூட்டாளிகள் யாரும் வரவில்லை. ஆனால், இவனுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருப்பது தெரிகிறது. அவர்கள் யார் என்று விசாரித்துவருகிறோம். இதற்காக, கொள்ளையன் தங்கியிருந்த இடத்துக்கு இன்று காலை அழைத்துச்சென்று விசாரித்தோம். அவனுடன் தங்கியிருந்தவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.