``மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி! | Reason behind Gurumurthy - Rajinikanth meeting

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (24/04/2018)

கடைசி தொடர்பு:13:05 (24/04/2018)

``மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி!

ரஜினி

'நெருப்பு... வெறுப்பு' என்று பி.ஜே.பி-க்கு எதிரான நிலைப்பாட்டில் கருத்து வெளியிட்ட 'நமது புரட்சித் தலைவி அம்மா' பத்திரிகை, நேற்று 'இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று பி.ஜே.பி - அ.தி.மு.க இரண்டையும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டது. தமிழக  அரசியல் களத்தில், 'குழப்பத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சிதான் 'துக்ளக்' ஆசிரியர் குரூமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது' என்கிற தகவல் டெல்லியிலிருந்து கசிய ஆரம்பித்துள்ளது. 

மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை தங்கள் கைப்பாவையாகவே நடத்திவந்தது. மத்திய அரசு மனம் கோணாதபடி எடப்பாடி தலைமையிலான அரசும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மேலாண்மை வாரியம்  அமைக்காமல் இழுத்தடித்து வருகிறது பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு. இதனால் இதுவரை பி.ஜே.பி-யின் ஊதுகுழலாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க முதல்முறையாக பி.ஜே.பி-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டம் நடத்தியது. அவையை நடத்த முடியாத அளவுக்கு அந்தக் கட்சியின் நடவடிக்கைகள் இருந்தன. இது பி.ஜே.பி தரப்பினருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில், கரிசனப் பார்வையோடு அ.தி.மு.க-வைப் பார்த்து வந்த மோடி, அ.தி.மு.க மீதான தனது பார்வையை மாற்றினார். 

இந்த நிலையில்தான் ஆளுநரை வைத்து தமிழக அரசுக்கு குடைச்சலை கொடுக்கத் திட்டமிட்டது மத்திய அரசு. ஆனால், நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தலை உருண்டதால், அந்தத் திட்டமும் பலிக்காமல் போய்விட்டது. விரைவில் மத்திய அரசின் பதவிக்காலம் முடிந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வரும் நிலை உள்ளது. அதே நேரம் நாடு முழுவதும் பி.ஜே.பி-க்கு எதிரான எதிர்ப்பு அலையும் கடுமையாக உள்ளது. எனவே, எதிர்ப்புகளைச் சமாளிக்க மாநிலம் வாரியாக வலுவான அடித்தளத்தை அமைக்க பி.ஜே.பி தலைமை முடிவு செய்துள்ளது. தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர பிற மாநிலங்களில் சொல்லிக்கொள்ளும் அளவில் பி. ஜே.பி-யின் செல்வாக்கு இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, நகர்ப் புறங்களைத் தாண்டி, கிராமப் புறங்களில் பி.ஜே.பி-யின் பெயரே இன்னும் தெரியாத நிலைதான் உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் எண்ணத்தில்தான் ஆரம்பத்தில் பி.ஜே.பி இருந்துவந்தது. ஆனால், 'அ.தி.மு.க-வின் சமீபத்திய போக்குகளால் அந்தக் கட்சிக்கும் மக்களிடையே செல்வாக்கு இல்லை' என்பதை உளவுத்துறை மூலம் லேட்டஸ்டாக அறிந்துகொண்ட பி.ஜே.பி மாற்று ஏற்பாட்டுக்குத் தயாராகிவிட்டது.

மோடி குருமூர்த்தி

கடந்த வாரம் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேட்டில், பி.ஜே.பி-க்கு எதிராக வந்த கவிதையை டெல்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்துள்ளது. அதேபோல், இரட்டைக்குழல் துப்பாக்கி என்று வந்த செய்தியையும் பி.ஜே.பி தலைமை ரசிக்கவில்லை. நாம் ஒதுங்க நினைத்தால், இவர்களாகவே நம்மை சேர்க்கப் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் பி.ஜே.பி-க்கு வந்துவிட்டது. 'தமிழக அரசியல் நிலவரத்தை இப்போது அமைதியாக வேடிக்கை பார்க்கலாம்; கர்நாடகத் தேர்தல் முடிவுக்குப் பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம்' என்ற நிலையில் பி.ஜே.பி இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் குரூமூர்த்தி மூலம் டெல்லி தலைமைக்கு சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. 'அ.தி.மு.க-வுக்கு எதிரான அதிருப்தி தமிழகம் முழுவதும் நிலவுகிறது. இனி அ.தி.மு.க-வை நம்பினால், நமக்கும் கெட்ட பெயர் ஏற்படும். மாற்றுவழியைத் தேடுவதே சிறந்தது' என்று குரூமூர்த்தி பற்ற வைக்க, அதை பி.ஜே.பி தலைமையும் கேட்டுக்கொண்டது. குரூமூர்த்தி மூலமே அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாரானது பி.ஜே.பி. அதன்பிறகுதான் 'பி.ஜே.பி கூட்டணிக்குள் ரஜினியைக் கொண்டுவந்து, முதல்வர் வேட்பாளராகவும்  ரஜினிகாந்தையே முன்னிறுத்துங்கள்' என்று சொல்லியுள்ளார்கள். ரஜினிகாந்த், அமெரிக்கா செல்ல இருந்ததால், ரஜினியின் வீட்டுக்கே சென்று இந்த விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார் குருமூர்த்தி. ரஜினியோ, `அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று சொல்லியுள்ளார்.

அதேநேரம் அ.தி.மு.க அரசின் மீதான கரிசனப் பார்வையை பி.ஜே.பி கைவிட்டுவிட்டதால், ஆளுநர் விவகாரம் முடிவுக்கு வந்ததும் தமிழகஅரசு மீது சாட்டையை சுழற்றத் தயாராகிவிட்டது மத்திய அரசு. கர்நாடகா தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக அரசின் மீது மத்திய அரசின் பிடி இறுக உள்ளது. அதற்கு முன்பு ரஜினியுடன் டீலிங்கை முடித்துவிடும் அவசரமும் அந்தக் கட்சிக்கு உள்ளது. மே மாதம் 16-ம் தேதிக்குப் பிறகு ஆளுநர் கையில் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்துக்கும் தேர்தல் நடத்தும் முடிவில் மத்திய அரசு உள்ளது. அந்தத் தேர்தலில், 'ஒருபுறம் மோடி படம், மறுபுறம் ரஜினியின் படம்; இந்த இரண்டு படங்களோடு தேர்தலை சந்தித்தால், வெற்றி நமக்குத்தான்' என்று ஏற்கெனவே துக்ளக் விழாவில் குருமூர்த்தி சொன்ன  திட்டத்தை செயல்படுத்தும் முடிவுக்கு பி.ஜே.பி தலைமை வந்துவிட்டதன் அறிகுறிதான் இது என்கிறார்கள் .


டிரெண்டிங் @ விகடன்