2,184 விபத்துகள்; 362 பேர் உயிரிழப்பு! நெல்லை மாவட்டத்தில் நடந்த கடந்த ஆண்டு அதிர்ச்சி

நெல்லை மாவட்டத்தில், கடந்த ஆண்டு முழுவதும் 2,184 சாலை விபத்துகள் நடந்ததாகவும், அதில் 362 பேர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு, சாலை விபத்துக்கள்குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. 

விபத்துகள் தடுப்பு விழிப்புணர்வு

நாடு முழுவதும் ஏப்ரல் 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. நெல்லையில் நேற்று தொடங்கிய இந்த விழாவின் இரண்டாம் நாளான இன்று, பாளையங்கோட்டை வ.உ.சி பூங்காவில் இருந்து விழிப்பு உணர்வுப் பேரணி தொடங்கியது. புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்ற இந்தப் பேரணி, நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைச் சென்றடைந்தது. 

டிரைவிங் பள்ளிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்ட இந்த வாகனப் பிரசார பேரணியை டி.ஆர்.ஓ முத்துராமலிங்கம் தலைமையில் போக்குவரத்து துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சசி, சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு தொடர்பான பிரசார நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு விநியோகித்தார். 

பின்னர் பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, ’’விபத்து இல்லாத போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதற்காக, வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த ஓராண்டில், நெல்லை மாவட்டம் முழுவதும் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காத 247 பேரின் வாகன உரிமங்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டன.

அத்துடன், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களைச் செய்ததற்காக, 6124 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாகத் தகுதியிழப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் தொடரும். கடந்த வருடம் முழுவதும் நெல்லை மாவட்டத்தில் 2,184 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 362 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு, இந்த விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்க, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!