வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (24/04/2018)

கடைசி தொடர்பு:17:16 (24/04/2018)

`என் தொகுதிக்குச் செல்ல முடியவில்லை' - அமைச்சர் மணிகண்டன்மீது கருணாஸ் பகீர் குற்றச்சாட்டு

அமைச்சர் மணிகண்டனால்தான் நான் எனது தொகுதிக்கு செல்ல முடியவில்லை என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் குற்றம்சாட்டினார்.

``அமைச்சர் மணிகண்டனால்தான் நான் எனது தொகுதிக்குச் செல்ல முடியவில்லை'' எனத் திருவாடானைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் குற்றம்சாட்டினார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் கருணாஸ்

திருவாடனை தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராகக் கருணாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க காலத்தில் திருவாடானை தொகுதிக்கு அடிக்கடி சென்று வந்தார். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் இது முற்றிலும் மாறியது. இதனால் திருவாடானை தொகுதி மக்கள் கருணாஸ்மீது கோபமாக உள்ளனர். இதைச் சூடேற்றும் வகையில் அமைச்சர் மணிகண்டன், தான் செல்லும் இடங்களில் எல்லாம் கருணாஸ் குறித்து விமர்சனம் செய்து பேசியதுடன், கருணாஸின் தொகுதி பணியையும் தான் சேர்த்து பார்ப்பதாகக் கூறி வருகிறார்.

இந்நிலையில் ராமநாதபுரம் வந்த கருணாஸிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த கருணாஸ், ''ஜெயலலிதாதான் என்னைத் திருவாடானை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினார். ஒரு சமுதாயத்தின் தலைவராக இருந்த நான் திருவாடானை தொகுதிக்குள் வாக்குகேட்டு சென்றபோது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து அவ்வப்போது தொகுதிக்குச் சென்று மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்தேன். திருவாடானையிலும் சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் அலுவலகங்கள் அமைத்து ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற எல்லா நாள்களிலும் செயல்பட வைத்துள்ளேன். எம்.எல்.ஏ விடுதியில் தூங்குவதற்கு படுக்கை போடாத ஒரே அலுவலகம் எனது அலுவலகம். அந்த அளவுக்கு தொகுதி குறித்த பணிகளை மனசாட்சிக்கு விரோதமின்றிச் செய்து வருகிறேன். ஆனால், அம்மாவின் மரணத்துக்குப் பின் அப்படியே இது மாறிவிட்டது. சட்டமன்ற உறுப்பினரான நான் சொல்லும் எதையும் அதிகாரிகள் கேட்பதில்லை. எதைக் கேட்டாலும் மந்திரி மணிகண்டனை நோக்கிக் கைகாட்டுகிறார்கள்.

நானே நேரடியாகத் தொகுதிக்குள் போகலாம் என்றால் பாதுகாப்பு பிரச்னை உருவாகிறது. எனக்கு வழங்கப்பட்டிருந்த வாகன போலீஸ் பாதுகாப்பை நிறுத்திவிட்டனர். பாதுகாப்பு இல்லாமல் தொகுதிக்குள் என்னால் செல்ல முடியும். ஆனால், அதன் மூலம் தொகுதி மக்களுக்கோ என் தொண்டர்களுக்கோ பிரச்னை ஏதும் வரக் கூடாது என்பதால்தான் போகவில்லை. ஒரு எம்.எல்.ஏ-வுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை குறித்து  நினைத்துகூட பார்க்க முடியவில்லை. இது குறித்து முதல்வரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனது தொகுதிக்குள் சட்ட விரோதமாக இயங்கும் இறால் பண்ணை, மணல் குவாரிகளை மூடுமாறு அமைச்சர், அதிகாரி எனப் புகார் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. தேர்தலில் நான் சார்ந்திருந்த கட்சியும் அம்மாவின் மரணத்துக்குப் பின் இரண்டு மூன்று பிரிவாகப் பிரிந்து கிடக்கிறது. இதில் யாரிடம் எதைச் சொல்லி என்ன நடக்கப் போகிறது. நான் வாங்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் ஒரு வாரம் தொகுதிக்குச் சென்று வரக்கூட போதாது. இந்த நிலையில் நான் செய்யும் பணிகளால் எனக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என அமைச்சர் மணிகண்டன் நினைக்கிறார். அவரால்தான் நான் எனது தொகுதிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது'' என்றார்.