மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்யும் மாற்றுத்திறனாளி! - நெகிழவைக்கும் மல்லிகா

முழு சுகாதாரத் திட்டம், சமூக வளர்ச்சி பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளைச் சேவையாகச் செய்தல் உள்ளிட்ட காரியங்களைச் செய்து, சமூக மதிப்பீடுகளில் உயர்ந்து நிற்கிறார் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்.


மாற்றுத்திறனாளி மல்லிகா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ளது காலாடிப்பட்டி சத்திரம் என்ற கிராமம். இங்கு வசிக்கும் மல்லிகா என்ற மாற்றுத்திறனாளிப் பெண், தன்னைப்போல உள்ள மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அரசு சார்ந்த உதவிகளைச் செய்து வருகிறார். சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்ட மல்லிகாவுக்கு உடன்பிறந்தோர் மட்டும் 8 பேர். இந்த ஒன்பது பிள்ளைகளையும் அவரின் தாயார் டீக்கடை நடத்தி, அதன்மூலம் வந்த வருமானத்தில்தான் வளர்த்து வந்திருக்கிறார். இந்த ஒன்பது பிள்ளைகளில் மல்லிகாவும் அவரின் தம்பி ஒருவரும் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள். பத்தாம் வகுப்பு படிப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்ட மல்லிகா, குடும்ப சூழல் காரணமாகச் சில வருடங்கள் வேலைக்குச் சென்றார். வாழ்க்கைத்தரமும் உயரவில்லை சமூக புறக்கணிப்புகளும் எள்ளல்களும் குறையவில்லை. பிறகு எப்படி சமூக அந்தஸ்தைப் பெற்றார். இதோ, அவரே சொல்கிறார் கேட்போம்.

"உலக வங்கி நிதி உதவியோட, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை புதுவாழ்வு திட்டம் என்ற ஒன்றை கிராம பகுதிகள்ல செயல்படுத்தினாங்க. அதுல நான் சேர்ந்தேன். அங்கு எனக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அப்போது எனக்குள்ளாக ஒரு யோசனை தோன்றியது. நம்மள மாதிரி இருக்கிறவங்களுக்கு இந்தத் திட்டம் மூலமா கத்துக்கிட்டதை ஏன் சேவையா எடுத்துப் பண்ணக்கூடாதுனு. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கென்று உள்ள தொழில் சார்ந்த கடன்களைப் பெற்றுத்தர்றதுல முழுசா இறங்கிட்டேன். அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் இலவசமாகவே செஞ்சுக்குடுக்க ஆரம்பிச்சேன். ஆட்டு லோன், மாட்டு லோன், தையல் மிஷின் லோன் அப்படீன்னு நிறைய திட்டங்களை அரசாங்கம் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக வெச்சிருக்கு. உருவத் தோற்றத்தின் காரணமாக, சின்ன வயசிலிருந்தே இந்தச் சமூகத்தால் கேலியும் கிண்டலும் புறக்கணிப்புமாக வலிகளைச் சுமந்தவள் நான். இன்றைக்கு அதே சமூகம் எனது சேவை மனப்பான்மையைப் பார்த்துவிட்டு, மதிப்பும் மரியாதையும் குடுக்குது. இப்போ, என்வாழ்க்கையும் மனசும் மகிழ்ச்சி பூக்கள் மலர்ந்து கிடக்கும் தோட்டத்தைப்போல இருக்குது" என்றார். இவரது சேவையைப் பாராட்டி, பல்வேறு தனியார் அமைப்புகளும் அரசும் விருதுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கியிருக்கின்றன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!