``குதர்க்கமும் விளக்கமும்!" பி.ஜே.பி. கூட்டணி குறித்து `நமது அம்மா' | admk party news paper 'namadhu amma' on bjp alliance

வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (24/04/2018)

கடைசி தொடர்பு:16:06 (24/04/2018)

``குதர்க்கமும் விளக்கமும்!" பி.ஜே.பி. கூட்டணி குறித்து `நமது அம்மா'

.தி.மு.க. அதிகாரபூர்வ நாளேடான, `நமது அம்மா' நாளிதழில், `பி.ஜே.பி. - அ.தி.மு.க. இரட்டைக்குழல் துப்பாக்கி' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்தச்  சூழலில், `நமது  அம்மா'  நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தக் கட்டுரை குறித்து விளக்கமளித்துள்ளார். 

 

மருது அழகுராஜ் - நமது அம்மா

அ.தி.மு.க. அதிகாரபூர்வ நாளேடான, `நமது அம்மா' நாளிதழில், `பி.ஜே.பி. - அ.தி.மு.க. இரட்டைக்குழல் துப்பாக்கி' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை குறித்து அ.தி.மு.க மூத்த தலைவரும் நாடாளுமன்றத் துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை மறுப்புத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரோ, ``தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை உரிய முடிவு எடுக்கும்'' என்றார். ஆனால், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ``அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் இரட்டைக்குழல் துப்பாக்கிதான்'' என்று விமர்சித்தார். கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அதற்கு அடுத்த நாள் 13-ம் தேதி, `நமது அம்மா' நாளிதழில் மத்திய பி.ஜே.பி அரசைக் கண்டிக்கும் வகையில் ஒரு கவிதை வெளியானது. அது, பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த நிலையில், அடுத்த 10 நாள்களில் இன்னொரு கட்டுரை வெளியாகி அதிர்வலைகளை  உருவாக்கியது.

இந்நிலையில் அந்தக் கட்டுரை குறித்து, `நமது அம்மா' நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்நாளிதழில் எழுதியுள்ள விளக்கத்தில், ``நமது அம்மா நாளிதழில் ஏப்ரல் 22 அன்று வெளியான ஓர் அரசியல் கட்டுரை, ஊடக மேடையிலும் பொதுவெளியிலும் பி.ஜே.பி-யோடு அ.தி.மு.க கூட்டணியா என்கிற உண்மைக்கு மாறான ஒரு விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது. `தி.மு.க நடத்துகிற போராட்டங்கள், காவிரிக்காக அல்ல.. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே' என்று தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில், தி.மு.க-வும் அதன் தோழமைக் கட்சிகளும் அ.தி.மு.க அரசுக்கும் மத்தியில் ஆளுகிற பி.ஜே.பி. அரசுக்கும் இடையிலே ஒரு மோதல் உருவாக வேண்டும் என்றும், அந்த மோதல் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்தில் ஒரு பாதகத்தைத் தருவதாக இருந்தால் மட்டுமே அ.தி.மு.க மீது அவதூறு பழிகளைத் தொடரலாம் என்கிற நப்பாசையைத் தி.மு.க. கொண்டிருக்கிறது.  அவ்வாறில்லாது மத்தியில் உள்ள பி.ஜே.பி மற்றும் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கடந்த பொன்னி நதி தாவா முழுமையான தீர்வுக்கு வந்தது என்கிற ஒரு புரட்சி நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற தி.மு.க-வின் மக்கள் நலன் கடந்த அரசியல் பதைபதைப்பையும் அந்த அரசியல் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

மோடி

மேலும், மத்தியில் ஆளுகிற அரசோடு இணக்கத்தோடு செயல்பட்டு தமிழகத்தின் நலன்களைப் பெருக்கிக்கொள்வது என்கிற கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லுறவு அரசியலை முன்னெடுப்பதே தமிழகத்தின் காவிரி விவகாரத்துக்கு நல்லதோர் தீர்வைத் தரும் என்பதைச் சுட்டிக்காட்டவே, மத்திய -மாநில  அரசுகள் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படுவதாகக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறிருக்க, அந்த வாசகர் கட்டுரையை அடிப்படையாக வைத்துக்கொண்டு அ.தி.மு.க - பி.ஜே.பி. இடையே கூட்டணி என்பது போன்ற ஒரு குழப்பத்தைச் சிலர் உருவாக்க முயற்சி செய்வது நியாயமல்ல.

மேலும், பி.ஜே.பி. - அ.தி.மு.க இடையிலான அரசியல் கூட்டணியை நமது அம்மா நாளிதழோ அல்லது அதில் பிரசுரிக்கப்படும் அரசியல் கட்டுரைகளோ முடிவு செய்ய முடியாது. அ.தி.மு.க அதிகாரபூர்வ தலைமைக் கழக அறிவிப்புகளன்றி, நாளிதழில் வெளியாகும், கட்டுரையாளர்களின் சொந்தக் கருத்துகள் கட்சியின் முடிவுகளை பிரதிபலிப்பவை அல்ல. அதுமட்டுமன்றி, ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட ஜனநாயகப் பேரியக்கமான கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூடிதான் கொள்கை மற்றும் கூட்டணி முடிவுகளை மேற்கொள்ளும். மேலும், ஏணிகள் தயவின்றி வான் தொடும் அளவுக்கு மக்கள் சக்தியைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அ.தி.மு.க., கூட்டுத் தேடி அலைய வேண்டிய நிலையில் எப்போதும் இல்லை. அது, இப்போதும் இல்லை என்பதைக் கடலளவாகப் பரந்து விரிந்திருக்கும் இந்த இயக்கத்தின் சக்தியை உணர்ந்தோரும் அறிவார்கள். 

ஆக, கட்டுரையாளரின் நோக்கம் பிறழ்ந்து உணர்ந்துகொள்ளப்பட்டு அது, குதர்க்கமாக்கப்படுகிறது என்பதாலாயே, இந்த விளக்கம் வாசகர் முன் வைக்கப்படுகிறது. அதேவேளையில் இதுபோன்ற குழப்பங்களுக்கு வித்திடும் வகையிலான கட்டுரையை ஒப்புதலின்றி பிரசுரித்ததற்காக அதற்குரியவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கையும் நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று சொல்லியிருக்கிறார்.

விமர்சனத்துக்கு விளக்கம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்