செவிலியர்களின் சம்பள உயர்வை செயல்படுத்த முரண்டுபிடிக்கும் கேரள மருத்துவமனைகள்!

கேரளாவில் செவிலியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசு நிர்ணயம் செய்துள்ள நிலையில், அதை ஏற்கத் தனியார் மருத்துவமனைகள் நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்திருப்பதால், இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மருத்துவமனைகள் எதிர்ப்பு

கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸுகள். அனைவருக்கும் குறைந்தபட்ச மாதச் சம்பளமாக 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (24.4.2018) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து நர்ஸுகள் கூட்டமைப்பு சார்பாக முடிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசு சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தனியார் நர்ஸுகளுக்கும் 10 வருடங்களாகப் பணியாற்றிய துணை நர்ஸுகளுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 20,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிக்கையை 23-ம் தேதி இரவு கேரள அரசு வெளியிட்டது. அதனால் நர்ஸுகள் சங்கத்தினர் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். 

ஆனால், கேரள அரசின் முடிவுக்கு தனியார் மருத்துவமனைகள் நிர்வாகத்தினர் தற்போது எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்களிடம் கேட்காமல் அரசு இந்த அறிவிக்கையை வெளியிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பினர், இந்த ஊதிய நிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர். இந்தச் சம்பள நிர்ணயத்தின் காரணமாகத் தேவையில்லாமல் நோயாளிகளின் கட்டணம் அதிகரிக்கும் ஆபத்து உருவாகியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், அரசின் ஊதிய நிர்ணய அறிவிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனை நிர்வாகங்களின் கூட்டமைப்பின் கூட்டம் 26-ம் தேதி கொச்சி நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே இந்த ஊதிய ஒப்பந்தத்தை ஏற்பதா அல்லது நீதிமன்றத்துக்குச் செல்வதா என முடிவு செய்யப்பட உள்ளது. இதனிடையே, ஊதிய உயர்வை தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் மருத்துவமனைகளின் முன்பாகப் போராட்டம் நடத்துவோம் என நர்ஸுகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதனால், கேரள மாநில அரசு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் பேச்சுவாரத்தைகளில் ஈடுபட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!