வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (24/04/2018)

கடைசி தொடர்பு:18:20 (24/04/2018)

சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு பிரசுரங்களை விநியோகித்த மாவட்ட ஆட்சியர்!

 சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பேரூந்து பயணிகளிடம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களைப் பேருந்துப் பயணிகளிடம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்.

துண்டு பிரசுரங்கள் வழங்கும் ஆட்சியர்

ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 23 முதல் 29-ம் தேதிவரை சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த விழா நேற்று தொடங்கியது. முதல் நாளில் சாலை விதிகள் குறித்தும், விபத்தில்லா வாகனம் ஓட்டுவது குறித்தும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார்.

சாலை பாதுகாப்பு வார விழாவின் 2-ம் நாளான இன்று பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துப் பயணிகள் இடையே சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் நடராஜன் சாலை பாதுகாப்பு குறித்த நோக்கங்களை விளக்கினார். மாவட்ட ஆட்சியரே நேரடியாக ஒவ்வொரு பேருந்திலும் விழிப்பு உணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியும் பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததும் பேருந்து நிலையத்தில் குழுமியிருந்த பயணிகளை ஆச்சர்யப்படச் செய்தது. இந்நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் சரவணன், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.