ஏரோநாட்டிகல் இஞ்சினீயரின் பாரம்பர்ய விதைகள் சேகரிக்கும் முயற்சி... ஒரு நெகிழ்ச்சிக் கதை! | Important attempt of collecting traditional seeds by an aeronautical engineer

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (24/04/2018)

கடைசி தொடர்பு:18:13 (24/04/2018)

ஏரோநாட்டிகல் இஞ்சினீயரின் பாரம்பர்ய விதைகள் சேகரிக்கும் முயற்சி... ஒரு நெகிழ்ச்சிக் கதை!

திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் தாம்பூல விதைகள் கொடுக்க விழிப்புஉணர்வு ஏற்படுத்தி, பலர் அதை செய்றாங்க. பத்து வகையான விதைகளைப் போட்டு கொடுக்கச் செய்றோம்.

       

 பாரம்பர்ய விதைகள்

``இயற்கையோடு இயைந்த, மனசுக்குப் புடிச்ச வேலை பார்க்குறதுதான் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான சான்று. `வாழ்க்கை'ன்னாலே அது கிராமங்களில்தான் கொட்டிக் கிடக்கு. அதனால்தான்,ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்புப் படிச்சும், நரகமான நகர வாழ்க்கைக்கு பயந்துகிட்டு, கிராமத்துக்கு ஓடோடி வந்துட்டேன். நம்மாழ்வார் அய்யா மேல உள்ள ஈடுபாட்டால, இப்போது பாரம்பர்ய காய்கறி விதை சேகரிப்பாளரா இதுவரை 250 காய்கறி ரக விதைகளைச் சேகரிச்சுருக்கேன். முக்கியமா மனசுக்குப் புடிச்ச வாழ்க்கை வாழ்கிறேன்" என்று சிலாகித்துப் பேசுகிறார் பரமேஸ்வரன். 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள குட்டியாகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். லட்சம் லட்சமாகச் சம்பளம் தரக்கூடிய ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர் படிப்பு வழி வேலை தேடிக்கொள்ளாமல், பாரம்பர்ய விவசாயம், விதைச் சேகரிப்பு, காய்கறித்தோட்டம் அமைத்துக் கொடுத்தல் என்று கிராமிய வாழ்க்கையையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாழ்பவர். சமீபத்தில் கரூர் மாவட்டம், வானகத்தில் நடந்த நம்மாழ்வார் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழாவில் 32 வகையான பாரம்பர்ய சுரைக்காய்களை வைத்து, அனைவரின் பார்வையையும் ஈர்த்தார். குறிப்பாக, இளைஞர்களை அதிகம் கவர்ந்தது அவரது சுரை கண்காட்சி. அவரிடமே பேசினோம்.

``இயற்கை, பாரம்பர்ய வேளாண்மை குறித்த விழிப்புஉணர்வு விதையை வெளியெங்கும் தூவியவர் நம்மாழ்வார். அதில் முளைத்த விதைகளில் நானும் ஒருவன். அதனால்தான் `பாரம்பர்ய விதைகளை மீட்பதே உண்மையான விவசாயப் புரட்சி' என்று அவர் முழங்கிய முழக்கத்தை வேத மந்திரமாக்கிக் கொண்டு, இப்போது விதை சேகரிப்பாளனாக இருக்கிறேன். அப்பாவுக்குச் சொந்த ஊர் ஒட்டன்சத்திரம். குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்பவர். அதற்காக ஊர் ஊராகப் போய் நான்கு வருஷத்துக்கு ஒரு ஊர்ல தங்கி விவசாயம் பார்க்கும் நாடோடிக் குடும்பம் என்னுடையது. ஒரு அக்கா, ரெண்டு அண்ணன்கள். அவர்கள் யாரும் படிக்கலை. அப்பா நல்லா படிச்ச என்னை மட்டும் கடனவுடன வாங்கி ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வச்சார். `இந்தப் பாழாபோன கருமாயப்பட்ட விவசாயம் என்னோட போகட்டும். நீயாச்சும் வேலைக்குப் போய் சந்ததியை முன்னேற்று'ன்னு அனுப்பி வச்சார். கோயம்முத்தூர்ல படிச்சேன். சொந்த வீடு, சொந்த நிலம் இல்லைன்னாலும் கிராமத்து வாழ்க்கைதான் எனக்குப் புடிச்சுருந்துச்சு. அதனால் படிப்பு முடிஞ்சதும் 2012ல கிராமத்துக்கே வந்துட்டேன். `வேலைக்குப் போகலை'ன்னு சொன்னதும் வீடே கொந்தளிச்சுட்டு. சமாளிச்சு இருந்தேன். ஆனால், அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலை. `விவசாயத்தையே செய்வோம்'ன்னு முடிவு பண்ணினேன். 2013 ல் குட்டியாகவுண்டன் புதூர் கிராமத்துக்கு வந்தோம். இங்க 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தோம். கடலை விவசாயம் பண்ணினோம். நஷ்டம்தான். `தப்பு பண்ணிட்டோமோ'ன்னு கலங்கிட்டேன். அப்பதான், சமூக வலைதளங்கள் மூலமா வானகத்தை பத்தி கேள்விப்பட்டு, 2014 ல் இங்க வந்து ஐந்து நாள் பயிற்சி எடுத்துக்கிட்டேன். நம்மாழ்வார் அய்யா பத்தி அப்பதான் தெரிஞ்சுச்சு. வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து நாமே தன்னிறைவு பண்ணினா வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் குடும்பத்துக்கு மிச்சமாகும்ன்னு சொன்னாங்க. அதனால், காய்கறி விதைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சேன்.


 பரமேஸ்வரன்

அதைப்பத்தி,சமூக வலைதளங்களில் பதிவு போட்டேன். தங்களிடமிருந்த காய்கறி விதைகளைத் தர பலர் முன்வந்தாங்க. சிலர் என்னிடமும் விதை கேட்டாங்க. அப்ப பி.டி கத்தரிக்காய் பிரச்னை இருந்ததால், அதற்கு எதிராக விழிப்புஉணர்வை ஏற்படுத்தக் கத்தரி விதைகளைத் சேகரிக்க ஆரம்பிச்சேன். தமிழ்நாட்டில் 500 வகையான கத்தரி ரகங்கள் இருந்தது தெரிய வந்துச்சு. அவை எதுவும் மார்க்கெட்டில் இல்லை. அங்கங்கே தமிழகத்தில் வைத்திருந்த விவசாயிகளிடம் சேகரிச்சேன். 50 ரக கத்தரி விதைகளை இதுவரை சேகரிச்சிருக்கேன். தமிழகத்தில் முப்பது கிலோமீட்டர்களுக்குள்ள ஒரு ரக கத்தரி இருந்துருக்கு. கோவை பக்கம் வரிக்கத்தரி, பொள்ளாச்சி பக்கம் புளியம்பூ கத்தரி, உடுமலைப்பேட்டை பக்கம் சம்பா கத்தரி, ஒட்டன்சத்திரம் பக்கம் பச்சை சம்பா கத்தரி, திண்டுக்கல் பக்கம் கொட்டப்பட்டி கத்தரி(இது பிரியாணி தாளிச்சா செய்ய பிரசித்திப் பெற்றது)ன்னு ஒவ்வொரு ரகமா நான் சேகரிக்க சேகரிக்க ஆச்சர்யமா இருந்துச்சு.

இதைப் பத்தி நான் பதிவு போடவும், என்னை இயற்கைக் காய்கறித் தோட்டம் அமைச்சுக் கொடுக்க பலர் கூப்புட்டாங்க அதன்படி, இயற்கைத் தோட்டம் அமைச்சுக் கொடுக்கும் வேலையை ஆரம்பிச்சேன். மண்புழு உரம், இலைதழைகளோடு கரும்புச் சக்கையைச் சேர்த்து கம்போஸ் பண்ணி உரமா பயன்படுத்த ஆரம்பிச்சேன். இது செலவில்லாத உரம். அதிகம் நகரங்களில்தான் மாடித்தோட்டம் அமைக்கக் கூப்பிட்டாங்க. மாசத்துல பத்துப் பேர் இப்படித் தோட்டம் அமைக்கக் கூப்பிடுறாங்க. பெங்களூர் வரை போய் காய்கறி மாடித்தோட்டம் அமைச்சு கொடுத்திருக்கிறேன். அடுத்துச் சுரைக்காய் விதைகளைத் சேகரிக்க ஆரம்பிச்சேன். மகுடிச் சுரை (இந்தச் சுரக்குடுவையில் மகுடி ஊதுவார்களாம்), பதனிச் சுரை (இந்தச் சுரக்குடுவையில் பதனி இறக்குவார்களாம்), 5 அடி நீளமுள்ள ஆள் உயர சுரை, வாத்துச் சுரை, சட்டிச் சுரை, பேய்ச் சுரை (இந்தச் சுரைக்காயை உணவுக்குப் பயன்படுத்த முடியாதாம். இந்தச் சுரைக்குடுவையை உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கும் இயற்கை பிரிட்ஜாகப் பயன்படுத்துவார்களாம். குறிப்பாக, மருந்துப் பொருள்களை பாதுகாக்கப் பயன்படுத்துவார்களாம்)ன்னு 32 வகை சுரை விதைகளை இதுவரை சேகரிச்சுருக்கேன். 

பாரம்பர்ய விதைகள்

 2016 ல் இருந்து மாட்டுக்கொம்பு வெண்டை, சிகப்பு வெண்டை ,யானைத்தந்த வெண்டை, பருமன் வெண்டை, மர வெண்டைன்னு 12 ரக வெண்டைகளைச் சேகரிச்சுருக்கேன். இது அன்னியில, 13 வகையான பூசணி விதைகள், 6 வகையான தக்காளி விதைகள், 4 வகையான மிளகாய் விதைகள், 13 வகையான அவரை விதைகள், 2 வகையான துவரை விதைகள், 3 வகையான பாகற்காய்,5 வகையான பீர்க்கங்காய் விதைகள்ன்னு இதுவரை 250 பாரம்பர்ய ரக விதைகளைச் சேகரிச்சு இருக்கேன்.

எங்க வயல்ல மூன்று ஏக்கர்ல பயிரிட்டு, விதையை எடுத்து வச்சுக்குவேன். ஊர்ல கேட்டா காய்கறிகளை விற்பேன். அதேபோல், காய்கறிகளை வத்தலா போட்டு வச்சு, அதை விற்பேன். ஊர்ல மட்டும் விதைகளை இலவசமா தருவேன். 

அதேபோல், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் தாம்பூல விதைகள் கொடுக்க விழிப்புஉணர்வு ஏற்படுத்தி, பலர் அதை செய்றாங்க. பத்து வகையான விதைகளைப் போட்டு கொடுக்கச் செய்றோம். அதுபோல், மாசத்துக்கு நான்கு நிகழ்ச்சிகள் கிடைக்கும். இப்படி மாதத்திற்கு 40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்குது. இப்போதான் எங்க வீட்டுல என்னை லேசா நம்ப ஆரம்பிச்சுருக்காங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எனக்கும், கயல்விழிக்கும் திருமணமானுச்சு. விதை சேகரிக்கும் என்னை அவங்க விரும்பித் திருமணம் பண்ணிக்கிட்டாங்க. எனக்கு வாழ்வளித்த நம்மாழ்வாரின் வானகத்துல அவரது பிறந்த, இறந்த நாள்களின் போது விதைக் கண்காட்சி நடத்துறேன். 

அதேபோல், சென்னையில சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான விதைக் கண்காட்சியில எனக்குச் சிறந்த விதை சேகரிப்பாளருக்கான விருது கொடுத்தாங்க. ஒட்டன்சத்திரம் பகுதியில் நான் விதை சேமிப்பு வங்கியா செயல்படுறேன். இந்த விதை வங்கி தாலுக்காவுக்கு  ஒன்று ஆரம்பிக்கணும்ன்னு லட்சியமா வச்சுருக்கேன். நம்மாழ்வார் தந்த இந்த வாழ்க்கை, நம்பிக்கை, விதை சேகரிப்பு முயற்சி எல்லாம் சேர்ந்து என்னை அதையும் செய்ய வைக்கும். நிச்சயம் செய்வேன்" என்றார் உறுதியாக.

 நினைத்தது நடக்கும் நண்பரே.

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close