`தலைக்கவசம் அவசியம்!’ - இருசக்கர வாகனப் பேரணியில் கலந்துகொண்ட கரூர் ஆட்சியர் | Karur collector participated in helmet awareness bike rally

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (24/04/2018)

கடைசி தொடர்பு:19:20 (24/04/2018)

`தலைக்கவசம் அவசியம்!’ - இருசக்கர வாகனப் பேரணியில் கலந்துகொண்ட கரூர் ஆட்சியர்

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தலைக்கவசத்துடன் இருசக்கர வாகனத்தை இயக்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்.

 

கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 29 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேரணியை ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அத்துடன், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை இயக்கியும் அவர் பொதுமக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ளவும், சாலை விதிகள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 23.4.2018 அன்று தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டும் விழிப்பு உணர்வுப் பேரணி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்றது. தலைக்கவசம் அணிவது விபத்தின்போது அதிக பாதிப்பில்லாமல் உயிர் காத்திட உதவும். இதை எப்போதும் பயணத்தின்போது அணிவது பாதுகாப்பான ஒன்றாகும். அனைத்து இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிந்து விபத்தில்லா பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்" என்றார். காவல் துறையினர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள், ஊர்க்காவல் படை, ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 400-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close