வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (24/04/2018)

கடைசி தொடர்பு:18:51 (24/04/2018)

`அரசியல் வாழ்வாதரமல்ல; அது நம் கடமை!’ - மாதிரி கிராமசபைக் கூட்டத்தில் கமல் பேச்சு

அரசியல் வாழ்வாதாரமல்ல; அது நம் கடமை என மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாதிரி கிராம சபைக் கூட்டத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் பேசினார். 

கமல்

மக்கள் நீதி மய்யம் சார்பாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் மாதிரி கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், “கிராம சபை கிராமங்களின் பலம். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ.1 கோடி முதல் 5 கோடி வரை ஒதுக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராமங்கள் இருக்கின்றன.

நகரத்தில் வாழ்பவர்களைவிட கிராமத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இன்று நகரங்களில் வாழ்பவர்களில் அதிகமானோர் கிராமங்களையே பிறப்பிடமாகக் கொண்டவர்கள். கிராமத்துடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு. அதிகாரத்தில் இருப்பவர்கள் கிராம சபையைச் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காகத்தான், இன்று நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்தக் கிராம சபை என்பது ஊற்று போன்றது. அதை நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போயிற்று. இன்று மக்கள் நீதி மய்யம் இதை ஆரம்பித்துவைத்திருக்கின்றது.

காவிரி பிரச்னை போன்று, இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வுகளைக் கிராம சபைகளில் எடுக்க முடியும். ஒவ்வொரு வருடமும் கட்டாயம் 4 முறை கிராம சபைக் கூட்டங்களைக் கூட்ட வேண்டும். அதாவது, ஜனவரி 26 குடியரசு தினம், மே -1 உழைப்பாளர்கள் தினம், ஆகஸ்ட் 15  சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம் ஆகிய தேதிகளில் கூட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் இந்தக் கிராம சபைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக அனைவருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை போன்ற இடங்கள் தொடங்கப்பட்டதற்கு முன்னரே இந்தக் கிராம சபைகள் தொடங்கப்பட்டது. கிராம சபைகளில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிட்டால் அதைச் சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற முடியும். ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என நாம் அனைவரும் இந்தச் சமூகத்தை சரி செய்ய வேண்டிய பணியாளர்களே.

பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அரசு ஊதியம் கேரளாவில் வழங்கப்படுகிறது. அதுபோல தமிழகத்திலும் வழங்கப்பட மக்கள் நீதி மய்யம் முயற்சியை முன்னெடுக்கும். இன்று மக்கள் சொல்வதைச் செவி சாய்க்கிறோம், அதை ஏற்றே செயல்படுவோம். மக்கள் அமர்வதற்கான ஒரு சிம்மாசனத்தைச் செதுக்கிக்கொண்டிருக்கிறோம். விரைவில் அந்த முயற்சி வெற்றியடையும். அவசியமிருந்தால், எப்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

என்னை சிலர் எறும்பு என்று சொல்கிறார்கள். ஆனால், யானையின் காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம். உங்கள் தொழிலைப் பாதுகாத்துக்கொண்டே அரசியலிலும் ஈடுபடுங்கள். அரசியல் வாழ்வாதாரமல்ல, அது நமது கடமை. இதுகுறித்த விழிப்பு உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான், இந்த மாதிரி கிராமசபை இன்று நடத்தப்பட்டது” எனப் பேசினார்.