வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (24/04/2018)

கடைசி தொடர்பு:19:03 (24/04/2018)

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைக் குண்டுவைத்து தகர்ப்பதற்காகப் பல்கலைக்கழகத்துக்குள் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று மர்ம நபர் ஒருவர், காவல் அவசர எண் 100-ஐத் தொடர்புகொண்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது சென்னை கன்ட்ரோல் ரூமுக்குப் போயிருக்கிறது. அதையடுத்து அவர்கள் சேலம் கன்ட்ரோல் ரூமுக்குச் சொன்னதும், சேலம் சூரமங்கலம் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மருதமலை தலைமையிலான வெடிகுண்டு நிபுணர் குழுவினர் பல்கலைக்கழகத்துக்கு விரைந்தனர்.

 பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவ மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்  மூலம் தேர்வு கட்டுப்பாட்டு மையம், துணைவேந்தர் அறை, பதிவாளர் அறை, ஆசிரியர்கள் ஓய்வு அறை, நூலகம் என அனைத்து பகுதிகளிலும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டும் வெடிகுண்டு தென்படவில்லை. அதையடுத்து சென்னை கன்ட்ரோல் ரூமுக்கு யார் பேசினார்கள் என்று நம்பரை ஆய்வு செய்து பார்த்ததில், சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஏ.கே.எஸ் மளிகைக் கடையில் இருக்கும் ஒரு ரூபாய் காயின் பாக்ஸிலிருந்து மர்ம நபர் பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து அந்த மர்ம நபரைப் பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பேராசியர்களிடம் பேசியபோது, ''பல்கலைக்கழகத்தில் பல பிரச்னைகள் நடந்துகொண்டிருப்பதால் அதைத் திசை திருப்புவதற்காகப் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களே யாராவது இந்த வேலையைச் செய்திருப்பார்கள். வெளியாட்கள் பல்கலைக்கழகத்துக்கு குண்டு வைப்பேன் என்று கூற வாய்ப்பில்லை'' என்றார்கள்.