வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (24/04/2018)

கடைசி தொடர்பு:22:30 (24/04/2018)

`சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக குறும்படங்கள்!’ - அசத்தும் மதுரை போலீஸார்

'கடந்தாண்டு மதுரை நகர்ப்பகுதியில் நடைபெற்ற 923 சாலை விபத்துகளில் 213 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 72 பேர் சாலையைக் கடக்கும்போது மரணமடைந்தவர்களாவர். அதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடந்தாண்டு சாலை விபத்து மிகக் குறைவு'

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பாக 29-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், 'மதுரை மாநகரில் நடைபெறும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதின் விளைவாக, கடந்த ஆண்டைவிட சாலை விபத்துகளும், இறப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற 923 சாலை விபத்துகளில் 213 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் அவர்களில் 72 பேர் சாலையைக் கடக்கும்போது மரணமடைந்தவர்களாவர். இதனால் மதுரையின் முக்கிய சந்திப்புகளில், திறன்மிக்க காவலர்களைக் கொண்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவதோடு, அவர்கள் மூலமாக தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விளக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 91 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. லாரி, ஆட்டோ, தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சிகள் 35 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அழகப்பன் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் போதுமான மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதுபோக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையோடு இணைந்து சாலை பாதுகாப்பின் அவசியம், தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் இரண்டு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்து திரையரங்குகளிலும், கேபிள்களிலும் ஒளிபரபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

அப்போது மதுரை மாநகர போக்குவரத்து இணை ஆணையர் அருண்பாலகோபாலன் உடனிருந்தார். முன்னதாக காவலர்கள், தன்னார்வலர்களைக் கொண்ட சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வு வாகனப் பேரணியை மகேஷ்குமார் அகர்வால் துவங்கி வைத்தார். இதில் தலைக்கவசம் அணிந்த 500-க்கும் மேற்பட்டோர் மதுரை நகர் முழுவதும் பேரணியாக வலம் வந்தனர். போக்குவரத்து காவல் பணியில் திறம்பட செயல்படும் தல்லாகுளம் போக்குவரத்துக் காவலர் ராஜபாண்டியை ஆணையர் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க