வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல் ரூ.12 பிடித்தம் செய்த வங்கி! - ரூ.8,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

வாடிக்கையாளர் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு சேவைக் குறைபாடு செய்த வங்கிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு சேவைக் குறைபாடு செய்த வங்கிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

வங்கிக்கு அபராதம்

நெல்லை தியாகராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அவருக்கு அங்குள்ள கனரா வங்கி கிளையில் சேமிப்புக் கணக்கு உள்ளது. அவரது வங்கிக் கணக்கிலிருந்து கடந்த 2015-ம் ஆண்டு மே 28-ம் தேதி 24 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இது பற்றி அவர் வங்கி நிர்வாகத்திடன் விசாரித்தபோது பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்தது தெரிய வந்தது. 

அதைத் தொடர்ந்து வங்கி நிர்வாகத்திடம் அவர் புகார் செய்தார். தன்னிடம் முன் அனுமதி பெறாமலும் தகவல் தெரிவிக்காமலும் வங்கி கணக்கிலிருந்து 24 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். வங்கி மேலாளருக்கு புகார் மனுவும் அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குப் பின்னர், மணிகண்டனின் வங்கிக் கணக்கில் 12 ரூபாய் மட்டும் திரும்பச் செலுத்தப்பட்டது. 

அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட 12 ரூபாயை வங்கி நிர்வாகம் திருப்பிக் கொடுக்கவில்லை. அதனால், தனது அனுமதி இல்லாமல் வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்த தொகையைத் திருப்ப வங்கிக் கணக்கில் செலுத்தக்கோரி மணிகண்டன், வங்கி மேலாளரிடம் புகார் செய்தார். ஆனால், வங்கி நிர்வாகம் அவருக்கு உரிய விளக்கம் அளிக்கவும் இல்லை. அத்துடன், பணத்தைத் திருப்பிச் செலுத்தவும் இல்லை. 

அதனால், மணிகண்டன் இது தொடர்பாக வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர், மனுதாரர் மணிகண்டனுக்கு கனரா வங்கி செய்தது சேவைக்குறைபாடு என்பதால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5,000 ரூபாயும் வழக்கு செலவு தொகை ரூபாய் 3,000 ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூபாய் 8,000 வழங்க உத்தரவிட்டனர். இந்த அபராதத் தொகையை ஒரு மாத காலத்துக்குள், வங்கியின் மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்கத் தவறினால் 6 சதவிகிதம்  வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!