வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (25/04/2018)

கடைசி தொடர்பு:07:00 (25/04/2018)

முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்ட தனிநபர் ஸ்மார்ட் கார்டுகள் - பரிதவிப்பில் 12 ஆயிரம் முதியவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிமான ஒரு நபர் ஸ்மார்ட்(ரேசன்) கார்டுகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட முதியவர்கள்  பொருட்கள் வாங்க முடியமால் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு சார்பில்  நடத்தப்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு அரிசி,பருப்பு, சீனி,  மண்ணெணெய் போன்ற பொருட்கள்  வழங்கப்பட்டு வருகின்றன.  கடந்த சில ஆண்டுகளாக ரேசன்கார்டுகள் புதுப்பிக்கப்படமால்,உள்தாள்கள் ஒட்டப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது, ரேசன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் புகைப்படம் மாற்றம், பெயர் மாற்றம் என பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

தமிழகத்தில் இனி  ரேஷன் கடைகள் மூடப்பட இருக்கின்றன, இனி அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட மாட்டது என,செய்திகள் பரப்பபட்டும் வருகின்றன. இந்நிலையில், அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு நபர் ரேஷன் கார்டுகளை நீக்கம் செய்து வருகின்றது. தூத்துக்குடியில், 9 தாலூகாக்களில் சுமார் 35 ஆயிரம் தனிநபர் ஸ்மார்ட் (ரேசன்) கார்டுகள் கண்டறியப்பட்டு, அதில், 20 முதல் 25 ஆயிரம் வரையிலான கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

குறிப்பாக கோவில்பட்டி கோட்டத்தில், கோவில்பட்டி,கயத்தார், விளாத்திகுளம்,ஓட்டப்பிடாரம் ஆகிய 4தாலூகாக்களில், 12,532 தனிநபர் ஸ்மார்ட்(ரேசன்) கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப் பகுதிகளில்,கணவனை  இழந்த அதிகமான முதியர்களே தனிநபர்  ஸ்மார்ட் கார்டுகள் உடையவர்களாக உள்ளனர். சமீபத்தில் ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்குவதும் நிறுத்தப்பட்டது. தற்போது, தனி நபர் கார்டும், நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது அரசின் இந்த திடீர் முடிவினால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் முதியவர்கள், விதவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து,  குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளிடம் பேசுகையில், ”போலி கார்டுகள், ஒரு குடும்பத்தில் 2 கார்டுகள், 3 கார்டுகள் இருந்தால் அவைகள் மட்டுமே நீக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். சீர்திருத்தம் என்ற பெயரில் நடக்கும் இச்செயல் முறைப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஸ்மார்ட் கார்டு வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க