வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (25/04/2018)

கடைசி தொடர்பு:08:40 (25/04/2018)

50 சதவிகிதம் பேர் ஆண்மை இழக்கும் அபாயம்! அய்யாக்கண்ணு சொல்லும் அதிர்ச்சித் தகவல்

அய்யாக்கண்ணு

'மரபணு மாற்றப்பட்ட விதைகளின்மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்களைக் கொடுத்து, ஆண்களை ஆண்மை இழக்கச் செய்யவும், பெண்களின் கருத்தரிக்கும் சக்தியை இழக்கச் செய்யவும் வாய்ப்பு உள்ளது' என்று கோவையில் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, நேற்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமலும், சாகுபடிசெய்ய தண்ணீர் கொடுக்காமலும் மத்திய அரசும் மாநில அரசும் ஏமாற்றிவருகின்றன. இதனால், விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை. விவசாயம் செய்ய முடியாமல் தங்கள்  நிலங்களை விற்றுவிட்டால், அதை கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கிக்கொள்ளும். அதன்பிறகு, அதில் பெட்ரோல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உறிஞ்சுக்கொள்வார்கள். நிலத்தடி நீர் 2000அடிக்குக் கீழே சென்றுவிடும். 

இதனால், குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் போகும். நிலத்தை விற்காமல் வைத்திருந்த சொற்ப விவசாயிகளுக்கும் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும். இத்தகைய சூழல் ஏற்பட்டவுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள்களை சந்தைப்படுத்துவார்கள். மரபணு மாற்றப்பட்ட விதையாலான உணவுகளை நாம் உட்கொள்ள ஆரம்பித்தால் 50 சதவிகிதம் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு கருத்தரிப்பு சக்தி குறைபாடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலை வராமலிருக்க, விவசாயிகளின் கடனை மத்திய அரசு ரத்து செய்வதுடன், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டியும், ஏரி குளங்களைத் தூர் வாரியும் நம் நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டிய கடமை, பிரதமர் மோடிக்கு உள்ளது. கர்நாடகா தேர்தல் முடிந்ததும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க