வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (25/04/2018)

கடைசி தொடர்பு:08:40 (25/04/2018)

முதல்வர் பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் கிண்டலடித்த சி.பி.ஐ தேசியச் செயலாளர்!

தமிழக முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் சொந்தகாலில் நிற்கவில்லை, அவர்கள் மோடியின் கால்களில்தான் நிற்கிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா கிண்டலாக கூறினார்.

''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சொந்தக்காலில் நிற்கவில்லை. அவர்கள் மோடியின் கால்களில்தான் நிற்கிறார்கள்'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணா கிண்டலாகக் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் நாராயணா நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார்

கேரள மாநிலம் கொல்லத்தில், வரும் 26-ம் தேதி நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலுக்காக பாண்டிச்சேரியிலிருந்து  கன்னியாகுமரி வழியாக செங்கொடிப் பயணம் கொல்லம் சென்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணா, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மோடி ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சியும், ஜனநாயகப் படுகொலையும் நடக்கிறது. மத்திய அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 50 நாள்களில் நிலைமை சீராகும்; இல்லையென்றால் என்னை தூக்கில்போடுங்கள் என்றார் மோடி. ஆனால், நூறு நாள்களிலும் நிலைமை சீராகவில்லை. அதன் பாதிப்பு இன்றும் தீரவில்லை. ஜி.எஸ்.டி வருவதற்கு முன்பு கார்ப்பரேட்டுகளுக்கு 32 சதவிகிதமாக இருந்த வரி, இப்போது 25 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பொதுமக்களுக்கு 0 சதவிகிதமாக இருந்த வரி, 28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சொந்தக்காலில் நிற்கவில்லை. அவர்கள், மோடியின் கால்களில்தான் நிற்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தைப் பொறுத்தவரை, தமிழக மக்கள் தேசிய கட்சிகளை புறக்கணித்ததால், அந்தக் கட்சிகள் வஞ்சிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆதரிக்கிறோம். சுங்கச்சாவடிகளின் வசூல் உரிமை தனியாரிடம் இருக்கிறது. அதில்,பொதுமக்கள் நலனைப் பார்க்கவில்லை. பெட்ரோல் விற்பனை தனியாரிடம் இருப்பதால், அவர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என தினமும் விலை அதிகரிக்கப்படுகிறது'' என்று குற்றம் சாட்டினார்.