மாயமான அதிகாரிகள்... கூட்டுறவு வங்கியைப் பூட்டி பொங்கல் படையல்வைத்த எதிர்க்கட்சியினர்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிகாரிகள் முறைகேடு செய்ய முயல்வதாகக் கூறி, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூட்டுறவு வங்கி அலுவலகத்தைப் பூட்டி, பொங்கல்வைத்துப் படையலிட்டு இறுதி மரியாதை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 கூட்டுறவு வங்கியை பூட்டி பொங்கல் படையல் வைத்த எதிர்க்கட்சியினர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இயங்கிவருகிறது. விவசாயிகளும் அது சார்ந்த பிற தொழில் பார்ப்பவர்களும்  இந்தப்  பகுதியில் ஏராளமாக வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தக் கூட்டுறவு வங்கியில்தான் கணக்கு வைத்திருக்கிறார்கள். அந்தவகையில், இதில் 2,200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வங்கிக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த 9-ம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில், அ.தி.மு.க மற்றும் தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே, கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்தது. அதனால், தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது.  இந்நிலையில், கடந்த 22-ம் தேதி கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட  தடையை உயர் நீதிமன்றம் நீக்கி தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 23-ம் தேதியான நேற்று முன் தினம், வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  24-ம் தேதி இறுதி வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று அங்குள்ளவர்கள் அறிவித்திருந்தார்கள். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்று யாரும் கொத்தமங்கலம்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வரவில்லை என அந்த ஊரைச் சேர்ந்த, வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து புகார் தரப்பட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், ஆலங்குடி  தி.மு.க எம்.எல்.ஏ., மெய்யநாதன் தலைமையில் கூட்டுறவு வங்கி அலுவலகத்தைப் பூட்டினார்கள். பெரிய மாலை ஒன்றை வாங்கிவந்து கேட்டில் மாட்டி, இறுதிச் சடங்கு நடத்தினார்கள். ஓலமிட்டு அழுவதுபோல புதுவித போராட்டத்தை நடத்தினர். பிறகு, தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர், "ஏம்ப்பா பேங்குக்கு பொங்கல் வெச்சு படையல் போட்டுருவோமாப்பா" என்று குரல்விட, அதை, அங்குள்ள  போராட்டக்காரர்கள் ஆமோதிக்க, அதற்கான வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்தேறியது. அடுத்த ஒருமணி நேரத்தில், சுடச்சுட சர்க்கரைப் பொங்கல் தயாரானது. அதை, பூட்டப்பட்ட  கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு வைத்துப்  படையலிட்டார்கள். தொடர்ந்து, வங்கி அதிகாரிகளுக்கு எதிராக எம்.எல்.ஏ., மெய்யநாதன் உள்பட திரண்டிருந்த அத்தனை பேரும்  கண்டன முழக்கமிட்டார்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!