'எஸ்.வி.சேகரை கைதுசெய்யுங்கள்'- திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரை கைதுசெய்யக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
 
எஸ்.வி.சேகரை கண்டித்து
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆங்கில ஊடகப் பெண் பத்திரிகையாளர் ஒருவரைக் கன்னத்தில் தட்டியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில், ஆளுநருக்கு ஆதரவாக பி.ஜே.பி-யைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகை, ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக தரக்குறைவான கருத்தை வெளியிட்டார்.  அதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் எஸ்.வி.சேகருக்கு எதிராகப் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது எஸ்.வி.சேகரை கைதுசெய்ய வலியுறுத்தி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி நிர்மலா, ''பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்திப் பதிவு போட்ட எஸ்.வி.சேகரின் கருத்துக்கு எதிராகப் போராடிய பத்திரிகையாளர்கள்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாகப் பணியில் இருந்து விரட்டிவிட அழுத்தம் தரப்படுகிறது. பத்திரிகையாளர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பெண்களுக்கும் எதிராகப் பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். இதுபோன்ற அநாகரிகமான முறையில் பி.ஜே.பி-யினர் தொடர்ந்து செயல்படுவது கண்டனத்துக்குரியது. அவரின் உறவினர் தலைமைச் செயலாளராக இருப்பதால், அவரைக் கைதுசெய்ய போலீஸ் தயங்குகிறது. தவறு செய்தவர் எவ்வளவு செல்வாக்கானவராக இருந்தாலும் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தவகையில், எஸ்.வி.சேகரை கைதுசெய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!