வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (25/04/2018)

கடைசி தொடர்பு:10:13 (25/04/2018)

காவிரியை மீட்க கல்லணையில் அணிதிரளும் விவசாயிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர்!

காவிரியை மீட்க கல்லணையில் உறுதியேற்பு  ஒன்றுகூடல், வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதில் அரசியல் தலைவர்கள், திரைப்படத்துறையினர், விவசாயிகள் அணிதிரள்கிறார்கள்.

தம்முடைய லட்சியத்தை நிறைவேற்ற, கடவுள் சிலைகள் மற்றும் முன்னோர்களின் நினைவிடங்களில் சபதம் ஏற்பது பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்துவருகிறது. பெரும் சவாலான காரியங்களைச் செய்துமுடிக்க, இதுபோன்ற சபதமேற்பு நிகழ்ச்சிகள் உணர்ச்சிபூர்வமான துணிவையும் நம்பிக்கையையும் கொடுக்கும். இந்த வகையில்தான், காவிரி உரிமை மீட்புக்குழுவின் அழைப்பில் கல்லணையில் ஒன்றுகூடல் உறுதியேற்பு நடைபெறுகிறது.

கல்லணை

தற்போது, காவிரிப் பிரச்னை உச்ச நிலையை அடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக, அதிகாரம் இல்லாத ஓர் அமைப்பு உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடகாவின் விருப்பத்தின்படி இது அமைக்கப்பட இருப்பதால், இனி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில்தான், காவிரி உரிமை மீட்புகுழுவினர் ஏற்பாட்டில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், சீமான், வேல்முருகன், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், திரைப்படத்துரையினர், விவசாய சங்கத்தினர், தமிழ்த் தேசிய அமைப்பினர் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படியே சென்னையில் ஐபிஎல்-லுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. நெய்வேலி அனல்மின் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது.

 வரும் 27-ம் தேதி, கல்லணையில் மாமன்னன் கரிகால் சோழன் சிலை முன்பு காவிரி உரிமையை மீட்க, உறுதியேற்பு ஒன்றுகூடல் நடத்த, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு, தமிழ்நாட்டில் காவிரிக்கான போராட்டங்கள் முழுவீச்சில் நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது. இதன் முதல்கட்ட போராட்டமாக, தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள இந்திய விமானப்படைத் தளம் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.